வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிட போவதில்லை எனவும் அந்த தொகுதியில் விசிக வேட்பாளராக இளைய பெருமான் மகன் ஜோதிமணி போட்டியிடுகிறார் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தனது முடிவு தொடர்பாக இன்று (ஏப்ரல் 4) செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த திருமாவளவன் கூறியதாவது, "வரப்போகும் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் என சொன்னவுடன் ஏதேதோ யூகங்களை கட்டமைத்துள்ளனர். வரும் தேர்தல் முடிவில் தொங்கு சட்டசபை வரும் என சந்தேகப்பட்டு நான் போட்டியிடுவதாக சொல்லப்படுகிற கருத்து தவறானது.
பதவிக்காக போட்டியில்லை
திருமாவளவன் துணை முதலமைச்சராக ஆசைப்படுவதாகவும், கூட்டணி ஆட்சிக்கான கனவை உயர்த்திப் பிடிப்பதாகவும் என் நோக்கத்தை கொச்சைப்படுத்துகிற காரணத்தினால், என் நிலைப்பாட்டை தள்ளிவைக்கிறேன். என் யுக்தியை மாற்றி அமைக்கிறேன்.
எனவே நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுவார். பதவிக்காக நான் போட்டியிடவில்லை. நான் போட்டியிடுவதால், இந்தக் கூட்டணி வெற்றி பெறாது என்ற தோற்றத்தை உருவாக்குவது ஏற்புடையது அல்ல. 200 இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 அன்று நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் வெளியாகின்றன.
இந்த தேர்தலில் ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட்கள், மதிமுக உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதில் விசிகவுக்கு இந்த முறை 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் விசிகவுக்கு 6 தொகுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை கூடுதலாக 2 தொகுதிகளை அக்கட்சி பெற்றுள்ளது.
விவாதப்பொருளான திடீர் முடிவு
இந்நிலையில், கடந்த வாரம் விசிக வேட்பாளர் பட்டியலை அறிவித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவதாக அதிரடியாக தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசியலில் மாநில அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. எனவே தான் வரும் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
: முதல்வர் ஸ்டாலின் ஆ.ராசா மீது தான் கோபப்பட வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி பதிலடி
2024 மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக திருமாவளவன் உள்ளார். அப்படி இருக்க, திடீர் முடிவாக திருமாவளவன் மாநில தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளது தனி கவனம் பெற்று விவதாக பொருளாக மாறியது.
விசிக வேட்பாளர்கள் யார் யார்?
இப்படியிருக்க தனது முடிவில் இருந்து பின்வாங்கி தேர்தலில் போட்டியில்லை என திருமாவளவன் இன்று அறிவித்துள்ளார். விசிக மற்றும் திருமாவளவனுக்கு எதிரானவர்கள் அவதூறுகளை பரப்புகின்றனர் எனவும் யுத்த களத்தில் முன்னோக்கி செல்வது ஒரு ராஜதந்திரம் என்றால், ஒரு அடி பின்னோக்கி செல்வதும் ராஜதந்திரம் தான் எனக் கூறி தனது முடிவு குறித்து திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து காட்டுமன்னார் கோயில் தொகுதியில் ஜோதிமணி, செய்யூர் தொகுதியில் சிந்தனைச் செல்வன், திருப்போரூர் தொகுதியில் பன்னீர் தாஸ், பெரியகுளம் தொகுதியில் ஆற்றல் அரசு, பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரகுமான், திண்டிவனம் தொகுதியில் வன்னி அரசு, அரக்கோணம் தொகுதியில் எழில் கரோலின், கள்ளக்குறிச்சி தொகுதியில் மாலதி ஆகியோர் விசிக வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

