தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தர்மபுரி, நேதாஜி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வள்ளலார் பள்ளி மைதானத்தில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் பரப்புரை செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், "அதிமுக சார்பில் பாலக்கோடு தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அரூர் தொகுதியில் சம்பத்குமார் எம்.எல்.ஏ, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் மரகதம் வெற்றிவேல் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். கூட்டணியில் அங்கம் வகிக்க்கும் பாமக சார்பில் தர்மபுரியில் போட்டியிடும் அன்புமணியின் மனைவி சௌமியா போட்டியிடுகிறார். பென்னாகரம் தொகுதியில் அன்புமணி சார்பில் பாடி செல்வம் போட்டியிடுகிறார். இவர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் வாக்களியுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
தர்மபுரி அதிமுகவின் கோட்டை. அதிமுகவும் பாமகவும் 2021 தேர்தலில் இணைந்து போட்டியிட்டு 100க்கு 100% வென்ற மாவட்டம். ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருக்கலாம், ஆனால் தர்மபுரிக்கு அதிமுகவும் பாமகவும் தான் தலைவர்கள். 2021ல் வெற்றியைக் கொடுத்தீர்கள், இந்த ஐந்தாண்டு மக்கள் விரோத ஆட்சி, மக்களின் வேதனைகள் எல்லா தரப்பிலும் போராட்டங்கள் என போராட்டக் களமாக மாறியிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இந்த நேரத்தில் தேர்தல் வந்திருப்பதால் இப்போது 100க்கு 100% அதிமுக பாமக வேட்பாளர்கள் வெல்வார்கள்.என்றார்.
தொடர்ந்து பேசியவர், "ஸ்டாலின் ஈரோட்டில் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் பெண்கள் அதிகம் வேலைக்கு போகிறார்களாம். இவர்கள் நல்லாட்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் நான் குறை சொல்கிறேனாம், நாங்கள் குறை சொல்லவில்லை உங்கள் புள்ளிவிவரம் குறை சொல்கிறது. அண்டப்புழுகு பேசும் ஸ்டாலின், உங்கள் ஆட்சியின் புள்ளிவிவரம் படி பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 26,651. இதை நாங்கள் சொல்லவில்லை, திமுக அரசு புள்ளிவிவரம் சொல்கிறது. இதில் போக்சோ 18 ஆயிரம் வழக்குகள். போக்சோவில் 6999 பேர் பாதிக்கப்பட்டதாக உங்கள் சமூகநலத்துறை அமைச்சரே சொன்னார், 84 கோடி நிவாரணம் அளித்ததாகச் சொன்னார்.
: கோவையைக் கைப்பற்ற வேண்டும் என்று பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
போக்சோ என்றால் சிறுமிகள் பாதிக்கப்படும் வழக்கு. உண்மை இப்படி இருக்கும்போது ஸ்டாலின் வடிகட்டிய பொய், அதுவும் ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய் பேசுகிறார். தினந்தோறும் பத்திரிகை பார்த்தால் இதுதான் செய்தி. சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பாதிப்பு. இப்படிப்பட்ட வெட்கம் கெட்ட ஆட்சியில், வேண்டுமென்றே அவதூறு என்று சொல்கிறார். இது உண்மையா? அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தைத்தான் நான் சொல்கிறேன். நாம் இதை சொன்னால் பொள்ளாச்சியை சொல்வார், பொள்ளாச்சி சம்பவத்தில் நியாயமான விசாரணைக்கு சிபிஐக்கு உத்தரவிட்டது அதிமுக அரசு. உங்கள் அரசு போல கேடுகெட்ட அரசு அதிமுக அரசு இல்லை.
அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்த்து உச்சநீதிமன்றம் சென்ற அரசு திமுக அரசு. உண்மை குற்றவாளிகளைக் காப்பாற்றவே உச்சநீதிமன்றம் சென்றார். அதேபோல் அண்ணா பல்கலையில் பாலியல் சீண்டல், யார் அந்த சார்? அதிமுக ஆட்சியில் அந்த சார் கண்டுபிடிக்கப்படுவார். காவல் பெண் அதிகாரி ஏடிஜிபி, காவல் ஆய்வாளர் தேர்வில் முறைகேடு என்று விசாரணை நடத்தி வந்தார், அவர் அலுவலகத்தில் தீ வைத்துக் கொளுத்திய அரசு பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் அரசா? தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையில் படுகொலை செய்யப்பட்டார். போலீஸார் புகாரை எடுக்கவே இல்லை, இப்படி வெட்கம் கெட்ட அரசு தேவையா? இதையெல்லாம் சொன்னால் ஸ்டாலினுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது எனக் கேள்வி எழுப்பினார்.
இபிஎஸ் பாஜகவுக்கு அடிமையாம், எங்கள் கூட்டணியில் உள்ள கட்சி கூட அடிமை கிடையாது. நாங்கள் நியாயத்துக்குப் போராடுவோம் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக இருந்தால் எதிர்ப்போம். உங்களை போல கூஜா தூக்கும் கட்சி இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரதமருக்கு கருப்பு பலூன் விட்டார், ஆளுங்கட்சியானதும் வெள்ளைக் குடை பிடித்தார், இது அசிங்கமாகஇல்லயா? மூன்று முறை பிரதமரை சென்னைக்கு அழைத்து மத்திய அரசு திட்டத்துக்காக வந்தார், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தீர்கள். அப்போது எல்லாம் பிரதமரின் தயவு தேவை. பேசுவது ஒன்று, செயல்படுவது ஒன்று என இரட்டை வேடம் போடும் தலைவர்.
எல்லா மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பெட்ரோல் விலை, கல்விக் கடன், கேஸ் மானியம் என எதையும் செய்யவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தவில்லை, அதிமுக அழுத்தம் கொடுத்ததால் 125 நாளாக உயர்த்தியது மத்திய அரசு. அதிமுக ஆட்சியில் 150 நாளாக உயர்த்தப்படும்." என்றார்.

