தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அவர் இன்று திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அவரது பேச்சு அரசியல் மற்றும் ரசிகர்கள் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்து போட்டியிடும் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார். ஒரு தொகுதியில் தோல்வி ஏற்பட்டாலும் மற்றொன்றில் வெற்றி பெறலாம் என்ற அரசியல் கணக்கில் அவர் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த முடிவு, அவரது கட்சியின் வலிமையை நிரூபிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
பரப்புரை கூட்டம் ரத்து:
சமீபத்தில் சென்னை பரப்புரை கூட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பலரும் விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் கூட விஜயை கிண்டல் செய்த பதிவுகள் அதிகமாகப் பரவின. ஆனால் அதனை பொருட்படுத்தாமல், தற்போது அவர் நேரடி மக்கள்சந்திப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நெல்லை பயணத்தின் போது வழக்கம்போல் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்த சிலர் விபத்தில் சிக்கிய சம்பவமும் நடந்துள்ளது. இதுபோன்ற ஆபத்தான செயல்களை தவிர்க்க வேண்டும் என்று அவர் பலமுறை கேட்டிருந்தாலும், ரசிகர்கள் அதை பின்பற்றாதது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் பல சர்ச்சை விஷயங்களை திறந்தவெளியில் பேசினார். "கரூர் சம்பவம் குறித்து எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதில் என்னை குற்றம் சாட்ட முயன்றார்கள். அதிலும் மக்கள் உண்மையை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக இருந்தார்கள்" என்று அவர் கூறினார். மேலும், தனது 'ஜனநாயகன்' திரைப்படம் தடை செய்யப்பட்டதாக கூறி, "அதை வைத்து என்னை பாதிக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை" எனவும் தெரிவித்தார். யார் இதற்கு காரணம் என்பது மக்களுக்கே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து அவதூறு:
இதோடு, தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து அவதூறு பரப்பப்பட்டதாகவும் விஜய் குற்றம்சாட்டினார். "தேர்தலுக்கு முன்பாக திட்டமிட்டு பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால் அது மக்களிடம் எடுபடவில்லை" என்று அவர் கூறினார். அவர் தனது உரையில் எந்த கட்சியையும் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், திமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய அரசியல் சக்திகளை மறைமுகமாக விமர்சித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. "என்னை யாராலும் தடுக்க முடியாது" என்ற அவரது கூற்று கூட்டத்தில் இருந்தவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
- நடிகர்கள் பின்னாடி போகாதீங்க.. படிப்பை மட்டும் பாருங்க.. தவெக விஜய் ரசிகர்களை விமர்சித்த ரஜினிகாந்த்!
மொத்தத்தில், நெல்லை பொதுக்கூட்டத்தில் விஜய் எடுத்துரைத்த கருத்துகள் தேர்தல் சூழ்நிலையை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன. வரவிருக்கும் நாட்களில் அவரது பிரச்சாரம் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக உள்ளது. மேலும் இந்த நெல்லை கேடிசி நகர் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், திமுக மற்றும் பாஜக கூட்டணிகளை கடுமையாக விமர்சித்து, இந்த தேர்தல் முடிவில் தவெக கண்டிப்பாக ஆட்சி அமைப்போம் என்றார்.

