தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தது வானியல். சூரியன் தனது பயணத்தைத் தொடங்கும் முதல் ராசியான மேஷத்தில் அடியெடுத்து வைக்கும் தினமே நமக்கு புத்தாண்டு.
வரும் ஏப்ரல் 14, 2026 (சித்திரை 1) அன்று 'பராபவ' எனும் புதிய தமிழ் ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை பிறப்பதால், நவகிரகங்களில் தளபதியான செவ்வாயின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். இதன் காரணமாக நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள், துணிச்சலான முடிவுகள் மற்றும் அதிகார வர்க்கத்தில் சில அதிரடி மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
பராபவ ஆண்டுக்கான சித்தர் பாடல்
தமிழ் வருடங்களின் படி, மொத்தம் அறுவது ஆண்டுகள் உள்ளன. அதில், இடைக்காடர் சித்தர் தனது 'அறுபது வருட வெண்பா'வில் இந்த ஆண்டைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"மிக்க பராபவத்தின் மேதினியிற் பின்மழையாம்
தக்க பசுக்கடழைக்குமே - இக்குப்
பலிக்காது நான்கு வகைப் பல்லுயிர்க்கும் இன்பம்
கலிக்காதனவே கருது"
சித்தர் பாடலுக்கான விளக்கம்:
இந்த ஆண்டில் பருவமழை சற்று தாமதமாக பெய்தாலும், கால்நடைகளுக்கு எந்த குறையும் இருக்காது. குறிப்பாக பால் உற்பத்தி அதிகரித்து விவசாயம் சார்ந்த தொழில்கள் மேன்மையடையும். மக்கள் மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தாலும், சில வாழ்வாதார சவால்களை சந்திக்க நேரலாம்.
பராபவ ஆண்டு பஞ்சாங்கம் கணிப்புகள்
பராபவ ஆண்டின் தொடக்க மாதங்கள், பொது மக்களுக்குப் பொருளாதார ரீதியாகச் சவாலாக இருக்கும். பருவம் மாறி மாறி வெயிலும் மழையும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிக வெயில், அதிக மழை, பருவம் தவறிய அல்லது முன்கூட்டிய மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் மாதத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீராகத் தொடங்கும். அரசாங்கத்தின் புதிய கொள்கைகள் மற்றும் உலகளாவிய சந்தையில் ஏற்படும் சமநிலை காரணமாக ஆண்டின் இறுதியில் ஓரளவு நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச்சுழல் கொஞ்சம் தணிந்தாலும், அடுத்த ஆண்டு தான் சீராகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
பிரபல ஜோதிடர்களின் கணிப்புப் படி, வேலை இழப்பு, வெளிநாட்டில் இருப்பவர்கள் அங்கிருந்து மீண்டும் தாய்நாடு திரும்புவது, போன்றவையும் நடக்கலாம். அதே நேரத்தில் மருத்துவத்தில் புரட்சி ஏற்பட்டு, நாட்பட்ட நோய்களுக்கு குணமடையும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படலாம்.
- பொருளாதாரம்: சந்தையில் பணப்புழக்கம் மந்தமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
- டிஜிட்டல் பாதுகாப்பு: இணைய வழி வர்த்தகங்கள் மற்றும் ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை. மோசடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
- அரசு & நிர்வாகம்: புதிய சட்டத் திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம். குறிப்பாக காவல் துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் நவீன மாற்றங்கள் நிகழும்.
- சுகாதாரம்: புதிய வகை மருத்துவ சவால்கள் தோன்றினாலும், அதற்கான தீர்வுகளையும் மருத்துவ உலகம் கண்டறியும்.
- தொழிற்துறை: புதிய தொழிற்சாலைகள் உருவாகவும், உற்பத்தித் துறை விரிவடையவும் சாதகமான சூழல் நிலவும்.
எந்த ஆண்டு பிறந்தாலும் நமது உழைப்பும், நேர்மறை எண்ணங்களுமே நம்மை உயர்த்தும். வரும் 'பராபவ' வருடம் சவால்களைக் கடந்து அனைவருக்கும் வெற்றியைத் தரும் ஆண்டாக அமையட்டும்!
Disclaimer: இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படிஎழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

