புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு (Puducherry Elections 2026) நடைபெறவுள்ளது.
அங்கு ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு பிரதான எதிர்க்கட்சி கூட்டணிகளாக காங்கிரஸ் - திமுகவின் இந்தியா கூட்டணி உள்ளது.
தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் புதுச்சேரியில் இன்று தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது அவர் திமுக மற்றும் இதர கூட்டணி கட்சியினருக்கு வாக்கு சேகரித்தார்.
புதுச்சேரிக்கு NDA துரோகம்
பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, "புதுச்சேரியை அழிவில் இருந்து காக்க, புதுச்சேரியை வளர்க்க - நமது கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அன்போடும் உரிமையோடும் நான் கேட்கிறேன். வெற்றி உறுதியா? அழகான புதுச்சேரியில், N.D.A. கூட்டணியின் அலங்கோலமான ஆட்சி நடக்க நீங்கள் அனுமதிக்கலாமா? நம்முடைய புதுச்சேரியின் நீண்ட கால கோரிக்கை என்ன? மாநில தகுதி வேண்டும். அதைப்பற்றி அவர்கள் பேசவில்லை. அவர்களுக்கு தேவை என்றால், ஒரு மாநிலத்தையே உடைத்து, புது மாநிலத்தை உருவாக்குவார்கள்.
அது போன்று, புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்க முடியாதா? இவ்வளவு நடந்த பிறகும் - புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லை என்று, துரோகம் இழைத்த பிறகும் - பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்லி, அதே வாக்குறுதியை கொடுத்து, மக்களை ஏமாற்ற வருகிறார்கள் என்றால், அவர்கள் புதுச்சேரி மக்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்.
எந்த முகத்தை வைத்துக் கொண்டு, பிரதமர் உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்? இப்படிப்பட்ட டப்பா எஞ்சினை மறுபடியும் கொண்டு வருவோம் என்று பேசலாமா? இவ்வளவு அவலங்களை புதுச்சேரி சந்தித்ததற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான் காரணம்.
: பெங்களூரு - கேரளா சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. பயணிகளுக்கு உற்சாக செய்தி.. முழு விவரம் உள்ளே!
ஏன் என்றால், பா.ஜ.க.வைப் பொறுத்தவரைக்கும் - தமிழ்நாடு போன்ற மாநிலங்களை முனிசிபாலிட்டிகளாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதேபோன்று, புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்காமல், ஊராட்சி அளவுக்கு ட்ரீட் செய்கிறார்கள். இங்கு இருக்கும் உங்கள் அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? சட்டசபைக்கு மாண்பு இருக்கிறதா? உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு மரியாதையாவது இருக்கிறதா? இங்கு ஆல்-இன்-ஆல் யார்? ஆளுநர்.. ஆளுநர் மூலமாக ரங்கசாமி அவர்களை பொம்மை முதலமைச்சராக வைத்திருப்பவர்கள், சாமானிய மக்களையா வாழ விடுவார்கள்?
இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான அருமையான வாய்ப்புதான் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி. புதுச்சேரியின் புதிய விடியலுக்கான நாள், ஏப்ரல் 9. விடியலுக்குப் புதுச்சேரி தயாரா? புதுச்சேரியை மட்டுமல்ல; மக்களாட்சியையும் காக்க வேண்டிய கடமை உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் அரசு, உங்களுக்காக செயல்படும் அரசாக இருக்க வேண்டும். டெல்லியின் கட்டளையை நிறைவேற்றும் அரசாக இருக்கவே கூடாது.
: சாத்தான்குளம் வழக்கு.. 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதிப்பு.. நீதிமன்றம் உத்தரவு
நான் உறுதியாக சொல்கிறேன்... இந்த ஸ்டாலினின் குரல், தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல; இந்தப் புதுச்சேரிக்கும் சேர்த்தேதான் எப்போதும் ஒலிக்கும். மீண்டும் சொல்கிறேன். இந்த ஸ்டாலினின் குரல், தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல; இந்தப் புதுச்சேரிக்கும் சேர்த்தேதான் எப்போதும் ஒலிக்கும். திராவிட மாடல் அரசின் தொடர்ச்சியாக, புதுச்சேரி விளங்கும்." இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

