தமிழகத்தில் நேற்றைய தினம் திருச்சி, தஞ்சை, கோவை, திருப்பூர் மதுரை, சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், புதுவையில் வறண்ட வானிலையும் நிலவியது. அதிகபட்சமாக அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 8 செமீ மழை பதிவானது.
அதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயர்ந்தும் ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.
நேற்றைய தினம் அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையாக சமவெளி பகுதியான தஞ்சாவூரில் 20.2 டிகிரியும், மலைப் பகுதியாக கொடைக்கானலில் 12.6 டிகிரியும் வெப்பம் பதிவானது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், லேட்டஸ்ட் வானிலை நிலவரம் (Weather Alert) தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானா மற்ரும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா, தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 6) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தேனி ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் மாலை வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
: சென்னையில் விஜய் பரப்புரை ரத்து ஏன்?.. தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டு
ஏப்ரல் 7ம் முதல் 10ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
வெப்பநிலை மாற்ற விவரம்
இன்று (ஏப்ரல் 6) மற்றும் நாளை ஏப்ரல் 7ம் தேதி அன்று வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், வட கடலோர தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அசவுகரியம் ஏற்படாலம்.
: அமித் ஷா தேர்தல் பிரச்சாரம்.. புதுச்சேரியின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்
சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று (ஏப்ரல் 6) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று முதல் ஏப்ரல் 10 வரை தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை. எனவே, மீனவர்கள் வழக்கம் போல கடலுக்கு செல்லலாம்.

