Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#JUST IN : மு.க.ஸ்டாலினுக்கு பின்னடைவு : மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் தீர்ப்பு..!

#JUST IN : மு.க.ஸ்டாலினுக்கு பின்னடைவு : மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் தீர்ப்பு..!

Top Tamil News 1 week ago

சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், இ.வி.எம் (EVM) மற்றும் வி.வி.பட் (VVPAT) சீட்டுகளை மீண்டும் சரிபார்க்கக் கோரித் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து மூன்று முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றிருந்த மு.க.ஸ்டாலின், இந்தத் தோல்வியை அடுத்துக் கொளத்தூர் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பட் சீட்டுகளை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தனது மனுவில் மு.க.ஸ்டாலின், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் 5 சதவீத இ.வி.எம் இயந்திரங்களைச் சரிபார்க்கத் தாம் விண்ணப்பித்தும், தேர்தல் ஆணையம் ஜூலை மாத இறுதியில்தான் அந்த நடவடிக்கையைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் அதிகாரிகளின் இந்தத் தாமதத்தால், சட்டப்பூர்வ தீர்வை நாடுவதற்கான காலக்கெடு பாதிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், சரிபார்ப்பின் போது மாதிரி வாக்குப்பதிவு இயங்காமை, கட்டுப்பாட்டு அலகு குளறுபடி மற்றும் முகவரிச் சீட்டுகளில் இருந்த முரண்பாடுகள் ஆகியவற்றைக் காரணங்காட்டி, 100 சதவீத வி.வி.பட் சீட்டுகளையும் எண்ண உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், தேர்தல் ஆணையத் தரப்பில் இந்த மனுவின் ஏற்புடைய தன்மை குறித்துக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் முடிவை எதிர்த்து கேள்வி எழுப்ப முறையான 'தேர்தல் மனு' (Election Petition) மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஸ்டாலின் அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை என்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் வாதிட்டார். இதற்குப் பதிலளித்த ஸ்டாலின் தரப்பு, தமது கட்டுப்பாட்டை மீறிய தேர்தல் அதிகாரிகளின் தாமதத்தால் சட்டப் பூர்வ உரிமையை இழக்கக் கூடாது என வாதிட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பளித்தது. அதில், தேர்தல் முடிவை எதிர்த்துத் தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பதால், ரிட் மனு அடிப்படையில் அனைத்து வாக்கு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட்களைச் சரிபார்க்க உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தது. மேலும், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி, மு.க.ஸ்டாலினின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News