Dailyhunt
கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு இனி கவலை இல்லை! நம் கப்பல்களுக்குக் கடற்படை பாதுகாப்பு: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு இனி கவலை இல்லை! நம் கப்பல்களுக்குக் கடற்படை பாதுகாப்பு: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

Top Tamil News 1 week ago

கேரளாவில் நேற்று நடந்த ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நம் நாட்டில் தற்போதைக்கு எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை.

மத்திய அரசு, மேற்காசிய போர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுஉள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றி வரும் நம் கப்பல்கள், பத்திரமாக அப்பகுதியை கடப்பதற்கு நம் கடற்படையினர் போதிய பாதுகாப்பு அளித்து வருகின்றனர். போர் பதற்றத்திற்கு இடையே வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களின் நலனை உறுதி செய்யும் வகையில், பிரதமர் மோடி துாதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மேற்காசிய போர் பதற்றத்தை பயன்படுத்தி, தவறான வழியில் நடக்க பாகிஸ்தான் முயற்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும். கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பாகிஸ்தான் இதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் பேசினார். இஸ்ரேல் - ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் எடுத்து வரும் மத்தியஸ்த முயற்சிகளை முறியடிக்க இந்திய ராணுவம் பாக்., மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே, அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக பேச்சு நடத்த பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மேற்கொண்ட முயற்சியில் நம் நாடும் பங்கேற்றுள்ளது. கச்சா எண்ணெய் வினியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மேற்காசிய நாடான ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இந்தியா உட்பட, 35 நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், நம் நாடு சார்பில் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி பங்கேற்று உள்ளதாக, நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News