Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மாணவர்களை நல்வழிப்படுத்த கோவை காவல்துறையின் புதிய முயற்சி: 'கல்வியே முதன்மை' திட்டம் அறிமுகம்!

மாணவர்களை நல்வழிப்படுத்த கோவை காவல்துறையின் புதிய முயற்சி: 'கல்வியே முதன்மை' திட்டம் அறிமுகம்!

Top Tamil News 2 weeks ago

கோவை மாநகர போலீஸ் சார்பில் 'கல்வியே முதன்மை' என்ற சிறப்பு ஒருங்கிணைப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வழிகாட்டுதல் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்கள் தவறான பாதைக்கு செல்வதற்கான ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து தடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதற்காக மாணவர்களின் வருகைப்பதிவில் ஏற்படும் திடீர் மாற்றம், கல்வி செயல்திறன் குறைதல், நடத்தை மாற்றம், சமூக வலைதள செயல்பாடுகள், குற்றப்பின்னணி கொண்டவர்களுடனான தொடர்பு உள்ளிட்டவற்றில் கல்லுாரி நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கல்லுாரி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் மட்டுமின்றி, கல்லுாரிக்கு வெளியே தங்கும் மாணவர்கள் யாருடன் தங்குகின்றனர், யாருடன் பழகுகின்றனர் என்பதையும் உரிய முறையில் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றப்பின்னணி கொண்ட வெளிநபர்கள் அல்லது முன்னாள் மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருப்பது தெரியவந்தால் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ஒரு நோடல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

அதேபோல், போலீஸ் சார்பில் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் லையசன் அதிகாரி நியமிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தப்பட உள்ளது. முதல்வர்கள், விடுதி காப்பாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் மாதாந்திர ஒருங்கிணைப்பு கூட்டமும் நடத்தப்பட உள்ளது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை, ராகிங், கும்பல் மோதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள், சமூக வலைதளங்களில் மிரட்டல் மற்றும் அவதுாறு, ஆயுதங்கள் வைத்திருத்தல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவற்றில் மாணவர்கள் சிக்காமல் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கவுள்ளனர்.

மாணவர்களை குற்றவாளிகளாக கருதி கண்காணிப்பது இந்த திட்டத்தின் நோக்கம் அல்ல. சமூக சூழல் மற்றும் தவறான நட்பின் தாக்கத்தால் மாணவர்கள் குற்றத்தின் பக்கம் செல்வதற்கு முன்பே அவர்களை அடையாளம் கண்டு, ஆலோசனை வழங்கி சரியான பாதைக்கு கொண்டு வருவதே நோக்கம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெற்றோர், கல்லுாரி நிர்வாகம் மற்றும் போலீசார் இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகர போலீஸ் அதிகாரி கூறுகையில், ' கல்வியே முதன்மை என்பதை மாணவர்கள் புரிந்து சரியான பாதையில் செல்லவேண்டும் என்பதால், இப்பெயர் வைத்துள்ளோம். கல்லுாரி காலங்களிலேயே மாணவர்களை நல்வழிப்படுத்திவிட்டால், எதிர்காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள். தவறான பழக்கங்கள் உள்ள ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மீட்கவுள்ளோம், ' என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News