Dailyhunt
சோகம்..! கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த தொழிலாளர்கள் சடலங்களாக மீட்பு..!

சோகம்..! கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த தொழிலாளர்கள் சடலங்களாக மீட்பு..!

Top Tamil News 1 week ago

கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீர் ஆங்காங்கே கழிவுநீர் உந்து நிலையங்கள் மூலம் உக்கடம் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய மண்டலம் 69வது வார்டுக்கு உட்பட்ட சாய்பாபா காலனி பாரதி பார்க் 1வது வீதியில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 15 அடி விட்டமும், 40 அடி ஆழமும் கொண்ட கழிவுநீர் தொட்டி உள்ளது. இதில் 60 எச்.பி. திறன் கொண்ட மோட்டார் மூலம் கழிவுநீர் பாதாள சாக்கடைக்குள் உந்தப்படுகிறது. இந்த மோட்டார் பழுதானதை அடுத்து, அதனை சரிசெய்து, கிரேன் மூலம் மீண்டும் தொட்டிக்குள் இறக்கும் பணியில் மாநகராட்சி தற்காலிக ஒப்பந்த ஊழியர்களான ரத்தினபுரியைச் சேர்ந்த அர்ஜுன்குமார் (38), மற்றும் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

மோட்டாரை கீழே இறக்கி பொருத்திவிட்டு, இருவரும் ஏணிப்படிகள் மூலம் மேலே ஏறிக்கொண்டிருந்த போது, அர்ஜுன்குமாரின் தலை உள்ளேயிருந்த பைப்பில் இடித்ததில், நிலை தடுமாறி தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடன் சென்ற சுரேஷ் அவரை காப்பாற்றுவதற்காக கீழே இறங்கிய போது, அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக மயக்கம் ஏற்பட்டு, அவரும் தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சக ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணித்துறை அதிகாரிகள், இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சுமார் 10 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, தொட்டியில் இருந்த கழிவு நீரை முழுமையாக அகற்றிய தீயணைப்புப் படை வீரர்கள், இருவரையும் சடலமாக மீட்டனர். இதனை பார்த்த அவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக இருவரின் உடல்களும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், "தவறி விழுந்த இரு ஊழியர்களின் உடல்கள் 10 மணிநேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபடவில்லை. மோட்டாரை பழுது செய்யும் போது தவறி விழுந்துள்ளனர்" எனக் கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Top Tamil News