சதீஷ், ஆதி சாய்குமார் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் படம், 'பத்துநாள் ராஜா'. ஆதி சாய்குமார், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
ஆதியா பிரசாத், சரண்யா ராமச்சந்திரன், கருடா ராம், ஆடுகளம் நரேன், பருத்திவீரன் சரவணன், 'ஆதித்யா' கதிர் உள்பட பலர் நடிக்கின்றனர். குரு சரவணன் இயக்கும் இப்படத்தை எஸ்ஜிஎஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் ஜி.சுரேஷ் தயாரிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படம் பற்றி இயக்குநர் குரு சரவணன் கூறும்போது, "ஒவ்வொரு மிடில்கிளாஸ் குடும்பங்களும் இன்று சந்திக்கும் பிரச்னையை உண்மைச் சம்பவங்களுடன் இப்படம் பேசுகிறது. கடன் செயலியில் பணம் வாங்கிக்கொண்டு மக்கள் படும் கொடுமைகளைச் செய்தித்தாள்களில் பார்க்கிறோம். அதன் பின்னணியில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
மிடில் கிளாஸ் வாலிபர் கேரக்டருக்கு சதீஷ் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் உருவாக்கியுள்ளோம். தெலுங்கில் 'ஈகோ ராஜா' என்று தலைப்பு வைத்துள்ளோம். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாக இருக்கிறது" என்றார்.

