Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆடு திருடிச்சென்றவர் அரசு வழக்கறிஞரா?.. தவெக அரசை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!!

ஆடு திருடிச்சென்றவர் அரசு வழக்கறிஞரா?.. தவெக அரசை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!!

TV9 Tamil 2 weeks ago
சென்னை, ஜூலை 08: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் கடுமையாக விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அனுபவமற்ற நபர்களின் கைகளில் ஆட்சி சிக்கியுள்ளதால், தமிழகத்தின் நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முற்றிலும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, "அனுபவமற்றவர்கள் ஒன்று கூடி ஒரு பெரிய மடத்தைக் கட்டுவது போலத்தான் இந்தத் தவெக-வினர் ஆட்சியை அமைத்துள்ளனர். ஆனால், அந்த மடத்தை எப்படிப் பராமரிப்பது என்று தெரியாமல் அவர்கள் தற்போது திணறி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் வாயில் வந்ததையெல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, தற்போது அவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். கடிவாளம் இல்லாத குதிரையைப் போல இந்த ஆட்சி தறிகெட்டு ஓடுகிறது" என்று சாடியுள்ளார்.

முடங்கிய கீழமை நீதிமன்றங்கள் - பல லட்ச ரூபாய் பேரம்:

தவெக அரசு தட்டுத்தடுமாறி ஆட்சிக்கு வந்ததைப் போலவே, கீழமை நீதிமன்றங்களும் அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் நீதி பரிபாலனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட அரசியல் ரீதியான அரசு வழக்கறிஞர்கள் அனைவரும், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விலகிவிட்டனர். ஆனால், காலியாக உள்ள அந்த இடங்களுக்குப் புதிய அரசு வழக்கறிஞர்களை முறைப்படி நியமிக்காமல், பல லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், "இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் மட்டும் கூறவில்லை; தவெக கட்சியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரே நீதிமன்றத்தில் இது குறித்து பகிரங்கமாக முறையிட்டுள்ளார்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 'ஆடு திருடி சிறை சென்றவர்களை எல்லாம் அரசு வழக்கறிஞர்கள் ஆக்கக்கூடிய விந்தையான அரசாக தவெக அரசு திகழ்கிறது' என்றும் அவர் தனது அறிக்கையின் வாயிலாக மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

நீதிமன்ற விசாரணைகள் பாதிப்பு - நீதிபதிகள் எச்சரிக்கை:

தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர்கள் இல்லாத காரணத்தால் வழக்குகளின் விசாரணைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு மாவட்ட நீதிபதி, விசாரணைக்கு வந்த சாட்சியிடம் அரசு தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய ஆள் இல்லாததால், மீண்டும் அவரை நீதிமன்றத்திற்கு வரவழைப்பதற்குக் கூடுதல் பயணப்படி வழங்க அரசுக்கு உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்துள்ளார். அரசின் சார்பாக, வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவதற்குத் தாமதம் ஏற்பட்டாலும், உதவி அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாகச் செயல்பட வேண்டிய அரசு நீதித் துறையினர் கீழமை நீதிமன்றப் பணிகளுக்குச் செல்லாமல் இருப்பதன் காரணம் என்ன என்பது புரியாத புதிராக இருக்கிறது என்று இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏழை, எளிய மக்கள் படும் அவதி:

சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு ஒரு சிவில் அல்லது கிரிமினல் பிரச்சினையால் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் கடைசி புகலிடமும் நம்பிக்கையும் நீதிமன்றங்கள் தான். முறையாக அரசு வழக்கறிஞர்கள் இல்லாத காரணத்தால் வழக்குகள் தள்ளிப்போகும்போது, ஏழை வழக்காளிகள் தங்களுடைய வழக்கறிஞர்களுக்குத் தொடர்ந்து 'பீஸ்-கட்டணம்' கொடுக்க முடியாமல் திணறும் சூழ்நிலை உருவாகிறது. சிறு குழந்தைகள் கடல் மணலில் கோபுரம் கட்டி விளையாடுவது போல் இந்த ஆட்சியாளர்கள், அரசைத் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டி வருவது கண்டிக்கத்தக்கது. நீதித்துறை மட்டுமல்லாது பல்வேறு அரசுத் துறைகளிலும் இதே போன்ற அவல நிலைகள் இருப்பதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இந்தப் புகார்கள் எல்லாம் முதலமைச்சரின் காதுகளில் விழுகிறதா என்றே தெரியவில்லை. ஆகாயத்தில் கோட்டை கட்டாமல், அரசாட்சி கையில் என்ற நிலையை உணர்ந்து, வாக்களித்த மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று தவெக அரசை வலியுறுத்துவதோடு, தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

அதிமுக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை:

ஒருபுறம் தவெக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், மற்றொரு புறம் அதிமுகவை மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர்த்துவதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறியும் நோக்கில், சென்னை அதிமுக தலைமையகத்தில் திருவள்ளூர் மேற்கு மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கருத்துகளை பெற்றார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil