Dailyhunt
படிப்படியாக குறையும் வெப்பநிலை.. தென் மாவட்டங்களில் தொடரும் கனமழை.

படிப்படியாக குறையும் வெப்பநிலை.. தென் மாவட்டங்களில் தொடரும் கனமழை.

TV9 Tamil 1 week ago

வானிலை நிலவரம், மே 7, 2026: தமிழகத்தில் கோடை வெப்பம் உச்சத்தில் இருந்த சூழலில், தற்போது அது சற்று தணிந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையை எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் 39.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 38 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 37 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 36.8 டிகிரி செல்சியஸ், மதுரையில் 36 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 37.5 டிகிரி செல்சியஸ், குமரியில் 36.2 டிகிரி செல்சியஸ் மற்றும் தர்மபுரியில் 37.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

 படிப்படியாக குறையும் வெப்பநிலை:

சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36.6 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 34.6 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேலூர், ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வந்தது. ஆனால் தற்போது அது சற்று குறைவாக பதிவாகியுள்ளது.

இருப்பினும், வரக்கூடிய நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு அவகசாம் வழங்கிய ஆளுநர் - எப்போ வரை தெரியுமா?

இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பதிவாகி வருகிறது. சுமார் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல், 0.9 கிலோமீட்டர் உயரத்தில் வடகோள் கர்நாடகம் முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழ்நாடு வழியாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

இதன் காரணமாக, மே 7ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மே 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 12ஆம் தேதியை எடுத்துக்கொண்டால், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதே சமயத்தில், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil