Dailyhunt
பலம் வாய்ந்த  திமுக, அதிமுக வேட்பாளர்களை வீழ்த்திய ஆட்டோ ஓட்டுநர் - யார் இந்த விஜய் தாமு?

பலம் வாய்ந்த திமுக, அதிமுக வேட்பாளர்களை வீழ்த்திய ஆட்டோ ஓட்டுநர் - யார் இந்த விஜய் தாமு?

TV9 Tamil 5 days ago
சென்னை, மே 4  :தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் மக்களுக்கு மிகப்பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் முடிவாக, வடசென்னையின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான ராயபுரத்தில், ஆட்டோ டிரைவராக இருந்த விஜய் தாமு, தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றுள்ளார்.
அரசியலில் புதுமுகமாக இருந்தாலும், பொதுமக்களின் ஆதரவை பெற்ற தாமு, திமுகவின் சுபைர் கான் மற்றும் அதிமுகவின் அனுபவமிக்க தலைவரான டி. ஜெயக்குமார் ஆகிய இருவரையும் தோற்கடித்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பலம் வாய்ந்த திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட அவர், மொத்தம் 55,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். மேலும் தனக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுபைர் கானை விட சுமார் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார். குறிப்பாக 5முறை எம்.எல்.ஏவாக இருந்த டி. ஜெயக்குமார் இந்த முறையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதும், அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எளிய மனிதர் டு எம்எல்ஏ

ஆட்டோ டிரைவராக இருந்த தாமு, தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாங்கள் புதியவர்கள் அல்ல, பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வேலை செய்துள்ளோம் என்ற கருத்தை முன் வைத்தார். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் அவர் பல ஆண்டுகளாக மக்களுடன் இணைந்து செயல்பட்டது, இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தவெக தலைவர் விஜய் தனது ஒவ்வொரு தொகுதியிலும் தன்னை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ததும் புதிய வேட்பாளர்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. விஜய் தாமு மற்றும் விஜய் இணைந்து எடுத்த புகைப்படம், குறிப்பாக தாமு கண்கலங்கிய நிலையில் விஜய்யை அணைத்த காட்சி என அவர் தனது தொகுதியில் பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. மேலும் ராயபுரம் கடலோர பகுதி என்பதால், மீனவ சமூகத்தை மையமாக வைத்து தாமு தனது தேர்தல் அறிக்கையை உருவாக்கினார். அந்த பகுதியில் நவீன வசதிகள், சமூக பாதுகாப்பு மீனவர் வாழ்வாதார மேம்பாடு என அவரது வாக்குறுதிகள் இவை அனைத்தும் வாக்காளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 1991 முதல் ராயபுரத்தில் வலுவான ஆதிக்கம் கொண்டிருந்த அதிமுகவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. திமுக தரப்பிலும், புதிய வேட்பாளரை நிறுத்திய முடிவு கைகொடுக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஒரு சாதாரண ஆட்டோ டிரைவராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்த விஜய் தாமுவின் பயணம், இந்த தேர்தலில் 'சாதாரண மனிதனின் வெற்றி' என்ற அடையாளமாக மாறியுள்ளது.  
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil