பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸின் கிழக்குச் புறநகர்ப் பகுதியான புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸ் பகுதியில், பிஏபிஎஸ் அமைப்பின் பிரம்மாண்ட சுவாமிநாராயண் இந்து திருக்கோயில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஐரோப்பியக் கண்டப் பகுதியில் அமையும் கோவில்:
பாரம்பரிய இந்து சிற்பக் கலை வழிகாட்டியான 'சில்ப சாஸ்திர' விதிகளின்படி இந்த ஆலயம் முற்றிலும் கற்களால் செதுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள திறமையான கைவினைஞர்களால் கைமுறையாகச் செதுக்கப்பட்ட மணற்கற்கள் பிரான்ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கே ஒன்றிணைக்கப்பட்டு இக்கோயில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 3,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் இக்கோயில், ஐக்கிய இராச்சியத்திற்கு வெளியே ஐரோப்பியக் கண்டப் பகுதியில் அமைக்கப்படும் மிகப்பெரிய கற்களாலான இந்து திருக்கோயில் என்ற பெருமையைப் பெறுகிறது.
மிக விமர்சையாக கும்பாபிஷேக விழா:
வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 'பாரிஸ் மந்திர் மஹோத்சவ்' என்ற 13 நாள் கலாச்சாரத் திருவிழாவின் போது, பிஏபிஎஸ் அமைப்பின் தற்போதைய ஆன்மீகத் தலைவர் மஹந்த் சுவாமி மஹாராஜ் அவர்களின் முன்னிலையில் இக்கோயிலின் மூர்த்தி பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழாக்கள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளன. பிரான்ஸில் வாழும் இந்திய சமூகத்தினரையும் ஆன்மீக விரும்பிகளையும் ஒன்றிணைக்கும் முக்கிய மையமாக இக்கோயில் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

