சென்னை, ஜூலை 4 : உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளுநரிடம் புகார் மனுவை அளித்தார்.
ஆளுநரை சந்தித்து நயினார் நாகேந்திரன் பரபரப்பு புகார்
ஆளுநருடனான சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், சென்னை கிண்டியில் அமைந்துள்ள மக்கள் பவனில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து தவெக ஆட்சியில் நடைபெற்ற முக்கிய குற்றங்கள் குறித்து புகார் அளித்தோம். குறிப்பாக, கடந்த ஜூன் 21, 2026 அன்று, மதுரையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுமிகளிடம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.நயினார் நாகேந்திரனின் பதிவு
இந்த நிலையில், அதனைக் குறித்து உடனடியாக முறையான விசாரணை நடத்த உத்தரவிடவும், மேலும் விசாரணை நிறைவடையும் வரை அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்து, தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கோரி ஆளுநரிடம் மனு வழங்கினோம். மேலும், கடந்த ஜூன் 5, 2026 அன்று நடைபெற்ற தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, எந்தவித அரசுப் பொறுப்பும் வகிக்காத தனிநபர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி பங்கேற்றதாக எழுந்துள்ள புகாரைக் கருத்தில் கொண்டு, அதனைக் குறித்தும் உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டி தனி மனுவொன்றையும் ஆளுநர் அவர்களிடம் சமர்ப்பித்தோம். மாநில நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றை நிலைநிறுத்தும் வகையில், இந்த இரண்டு மனுக்களிலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் மீது நியாயமான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என நம்புகிறோம் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுளார்.

