இந்தியர்களுக்கும், தங்கத்துக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. காரணம், காலங்கள் கடந்தாலும் இந்தியர்கள் மத்தியில் தங்கத்தை வாங்கி வைக்கும் பழக்கம் மட்டும் இன்றளவும் குறையாமல் உள்ளது.
இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியை விடவும், இந்திய குடிமக்களின் வீடுகளில் அதிக அளவு தங்கம் உள்ளது.

இவ்வாறு இந்திய வீடுகளில் முடங்கி கிடக்கும் தங்கத்தை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தும் நோக்கில் தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை புதுப்பிக்க மத்திய அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து இரண்டு வாரங்களில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் காலம் காலமாக தங்கத்தை வாங்கி சேமிக்கும் பழக்கம் பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக இந்திய வீடுகளில் அதிக அளவு தங்கம் உள்ளது. பொதுமக்கள் முதலீடாக நினைத்து தங்கத்தை வாங்கி வீட்டில் சேமித்து வைக்கும் நிலையில், தங்கம் பயன்பாடின்றி வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடப்பதாக தொழில்துறை அமைப்புகள் கூறுகின்றன.

இந்த நிலையில் தான் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, திருத்தப்பட்ட தங்க பணமாக்கல் திட்டத்தை ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தங்கத்தை அரசின் அங்கீகாரம் பெற்ற மையங்களில் ஒப்படைத்து அதற்கு வட்டி பெறும் திட்டம் இதுவாகும்.

இந்த திட்டத்தில் தங்கத்தை ஒப்படைக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட காலம் முடிந்த பின், தங்கமாகவோ அல்லது அதற்குரிய பண மதிப்பாகவோ திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அதாவது பணத்தை முதலீடு செய்து அதற்கு வட்டி வருமானம் பெறுவதை போல தங்கத்தை முதலீடு செய்து வருமானமாக பெறலாம்.

