2026 ஜனவரி மாதத்தில் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜூன் மாதம் முழுவதும் தங்கம் கடும் விலை சரிவை சந்தித்ததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை குறைவது நகைக் கடன் வாங்கியவர்களுக்கு நல்லதா, கெட்டதா என்பது குறித்து பார்க்கலாம்.

தங்கம் விலை குறைந்து வருவது தங்க நகை வாங்க திட்டமிடும் சாமானியர்களுக்கு நல்ல செய்தி ஆகும். ஆனால், தங்க நகைக் கடன் வாங்கியவர்கள் அல்லது தங்க நகைக் கடன் வாங்க நினைப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல செய்தியாக இருக்காது. அதற்கு பின்னால் சில முக்கிய காரணிகள் உள்ளன.

அதாவது, வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ நாம் அடகு வைக்கும் தங்கத்தின் சந்தை மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டுமே கடனாக வழங்கும். இதனை Loan To Value என அழைக்கின்றனர். பொதுவாக தங்க நகைக் கடன் வாங்கும்போது அதிகபட்சமாக 75 சதவீதமாக நிர்ணயம் செய்யப்படும்.

தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வைத்து நகைக் கடன் பெறுகிறீர்கள் என்றால் உங்களுக்கு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ ரூ.75,000 வரை மட்டுமே கடன் வழங்கும். தற்போது தங்கத்தின் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 65 சதவீதம் மட்டுமே கடன் வழங்குகின்றன.

ஒருவேளை நீங்கள் தங்கம் விலை உச்சத்தில் இருந்தபோது கடன் வாங்கியிருந்தால், தங்கம் விலை குறையும்போது அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு குறையும். ஆனால், நீங்கள் வாங்கிய கடனின் தொகை மாறாது. இதனால், உங்கள் கடன் தொகையானது தங்கத்தின் புதிய மதிப்பை விட அதிகமாகிவிடும்.

