சென்னை, ஜூலை 4 : தமிழகத்தின் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டங்களில் ஒன்றான சென்னை மற்றும் திருச்சி பசுமைவழி விரைவுச் சாலை திட்டப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது.
3 மணி நேரமாக குறையும் திருச்சி - சென்னை பயணம்?
இந்த புதிய விரைவுச் சாலை சுமார் 300 கிலோமீட்டர் நீளத்தில், 6 வழித்தடங்களுடன் நெடுஞ்சாலையாக அமைக்கப்படுகிறது. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் இந்த சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை முதல் திருச்சி வரை சாலை வழியாக பயணிக்க சராசரியாக 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகும். ஆனால் இந்த புதிய விரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வந்த பின், பயண நேரம் கிட்டத்தட்ட 3 மணி நேரமாக குறையும் என்று கூறப்படுகிறது.12 மாவட்டங்கள் வழியாக செல்லும் சாலை
இந்த புதிய விரைவுச் சாலை, சென்னை புறவழிச்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே தொடங்கி, தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள் வழியாக திருச்சி வரை செல்லும். இதன் மூலம் பல பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்து வசதி மேம்படுவதோடு, தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தொடர் விடுமுறை நாட்களில் செங்கல்பட்டு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இனி இந்த சிக்கல் முழுமையாக தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கியமான செயல்பாடாக, காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் ஒன்றும் கட்டப்பட உள்ளது. இது போக்குவரத்தை மேலும் எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக முதல்வர் விஜய், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் போக்குவரத்து வசதியை மேம்படுத்த இந்த திட்டம் மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் ஆகியவை முக்கிய சவால்களாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வனப்பகுதிகள் பகுதிகளில் தேவையான அனுமதிகளை பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும், இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கும் என்று உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
