Tamilnadu Weather Today: தென் தமிழக பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில் இன்று (ஏப்.03) தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் மழை தீவிரம் சற்று அதிகமாக இருக்கும் என கூறியுள்ளது.வரும் நாட்களில் வானிலை நிலவரம்:
தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் ஏப்.4ம் தேதியும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வரும் ஏப்.5 மற்றும் 6ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும். ஆனால் வடக்கு உள் தமிழகத்தில் வறண்ட நிலை தொடரலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். ஏப்.03 முதல் 05ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் பகலில் வெப்பம் அதிகரித்தாலும், மாலை நேரங்களில் மழை வாய்ப்பு இருக்கும்.சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை மேலும் அதிகரித்து 36-37°C வரை செல்லக்கூடும். இதனால் நகர்ப்புறங்களில் வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
