Tamilnadu Polls 2026: தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கலுக்கு 2 நாட்களே அவகாசம்:
இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்றைய தினம் (ஏப்.3) வெளியானது. இதில், ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இன்றும், தங்கட்கிழமையும் என 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மாங்காட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை செல்வப்பெருந்தகை சந்தித்தார்.நூற்றுக்கு நூறு வெற்றி பெறுவோம்:
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பாஜக, அதிமுக முகமூடி அணிந்து தமிழ்நாட்டிற்குள் நுழைய இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். இந்த ஜனநாயகமுறை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் பாஜக, அதிமுகவை தோற்கடிக்க வேண்டும், தேர்தல் முடிவு வந்த பிறகு என்னுடைய முழுமையான பணி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு மட்டும் தான். 2 ஆண்டுகள் தமிழக மக்களுக்கு பணி செய்தது போல், நாடாளுமன்ற தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றது போல், இந்த தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெறுவோம் என்றார்.தலைவர் பதவியில் இருந்து விலகல்:
தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தியிடம் தெரிவித்து விட்டேன். தமிழ்நாடு மக்களின் பிள்ளையாக 2 ஆண்டுகள் இருந்தேன். தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டு பிள்ளையாக வேறு யாராவது வேலை செய்வார்கள். நான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களின் பிள்ளையாக இருந்து பணி செய்வேன். ஒவ்வொரு பதவியில் இருந்து ஒவ்வொருவர் விலகும் போதும் மன நிறைவோடு விலகுவார்கள். அதே போன்று நானும் மனநிறைவோடு பதவி விலக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
