Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை?.. பணி ஆணையை நேரில் வழங்கிறார் முதல்வர் விஜய்?.. பரபரப்பு தகவல்!!

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை?.. பணி ஆணையை நேரில் வழங்கிறார் முதல்வர் விஜய்?.. பரபரப்பு தகவல்!!

TV9 Tamil 2 weeks ago
சென்னை, ஜூலை 03: கடந்த ஆண்டு கரூரில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து, வரும் 10-ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிடும் முதல்வர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தானே இதற்கான பணி ஆணைகளை கையில் வழங்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தமிழக அரசு இன்னும் எந்தவொரு முறையான அரசாணையோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பையோ வெளியிடவில்லை. எனினும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்குவது குறித்த தீவிர ஆலோசனைகளும் ஆயத்தப் பணிகளும் தவெக தலைமை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாமல்லபுரத்தில் வெளியான முதல் தகவல்:

முன்னதாக, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் என்.ஆனந்த், முதல்வர் விஜய் வரும் 10ம் தேதியன்று கரூர் மாவட்டத்திற்குச் செல்லவிருக்கிறார் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கே முதல்வர் நேரடியாகச் சென்று அவர்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் தான், கரூர் பயணத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் தீவிரமாக நடந்து வருவதாகத் தெரிகிறது.

பின்னணி மற்றும் தற்போதைய நிலவரம்:

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவராக இருந்த விஜய் அவர்களின் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவம் தொடர்பாகத் தற்போது சிபிஐ (CBI) தற்காலிக அலுவலகம் அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விபத்து நடந்த உடனேயே தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு வரவழைத்து நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். அப்போது, "தேர்தல் முடிந்த பிறகு கண்டிப்பாகக் கரூருக்கு நேரில் வந்து உங்களைச் சந்திப்பேன்" என அவர் உறுதியளித்திருந்தார். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக கரூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பாதிக்கப்பட்டவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பெறப்பட்டு, தற்பொழுது தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன பணிகள் வழங்கப்படலாம்?

ஆவணங்களின் பரிசீலனைக்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களது கல்வித் தகுதியின் அடிப்படையில், வருவாய்த்துறையில் இடைநிலை உதவியாளர் (இடைநிலை உதவியாளர்கள்) உள்ளிட்ட அரசுப் பணிகள் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் 10-ஆம் தேதி கரூரில் நடைபெறும் நிகழ்வின் போது, இந்த 41 குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அரசுப் பணிக்கான ஆணைகளை முதல்வர் ஜோசப் விஜய் தனது கரங்களால் வழங்க இருப்பதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ₹20 லட்சம் தவெக சார்பில் நிவாரணமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது வாரிசுகளுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் வேலை வழங்கத் தவெக தலைமை எடுத்துள்ள இந்த உத்தேச முடிவு, கரூர் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil