Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு - கையும் களவுமாக பிடிபட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு - கையும் களவுமாக பிடிபட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்

TV9 Tamil 2 weeks ago
சென்னை, ஜூலை 2 : தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையராகப் பணியாற்றி வந்த ஜோதிலட்சுமி, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் அருள்மிகு வள்ளியம்மைநாதர் கோயில் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்ததாரர் ஒருவர் விண்ணப்பித்திருந்தார்.

கையும் களவுமாக பிடிபட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்

இந்த ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதி மற்றும் அதற்கான கோப்புகளைச் சரிபார்க்கும் பணியில் இணை ஆணையர் ஜோதிலட்சுமி ஈடுபட்டு வந்தார். இந்தப் பணி தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் ஜோதிலட்சுமி ரூ. 1 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர், இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழங்கிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஒப்பந்ததாரர் ஜோதிலட்சுமியிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையில் உதவி ஆணையராகப் பணியில் சேர்ந்த ஜோதிலட்சுமி, கடந்த 15 ஆண்டுகளாகத் துறையின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான அரசின் உத்தரவின்படி, உதவி ஆணையர் நிலையில் இருந்து துணை ஆணையராகவும், அதனைத் தொடர்ந்து இணை ஆணையராகவும் பதவி உயர்வு பெற்றார்.

இவர் திருவண்ணாமலை மாவட்டக் கோயில்களின் உதவி ஆணையராகவும், சென்னை பார்த்தசாரதி சுவாமி கோயிலின் துணை ஆணையராகவும் செயல் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், தஞ்சாவூர் மற்றும் திருவண்ணாமலை என தமிழகத்தின் மிக முக்கியமான பல திருக்கோயில்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். ஜோதிலட்சுமியின் பதவிக்காலம் பல சர்ச்சைகளுக்கு உரியதாகவே இருந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபோது, கோயிலுக்குச் சொந்தமான ரூ.

10 லட்சம் மதிப்பிலான பணததை உரிய முறையில் மாற்றாமல் வீணடித்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதுமட்டுமின்றி, பக்தர் ஒருவர் காணிக்கையாகச் செலுத்திய கோயில் நகையைத் திருடியதாகக் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், சென்னை பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்துக்கான டிக்கெட் விற்பனையில் சுமார் ரூ. 4 லட்சம் வரை மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன.

இத்தனை குற்றச்சாட்டுகள் இவர் மீது நிலுவையில் இருந்தபோதிலும், துறை ரீதியாக 17(பி) பிரிவின் கீழ் மட்டுமே விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தும், அவருக்குத் தொடர்ந்து பதவி உயர்வுகள் வழங்கப்பட்டது எவ்வாறு? என்பது தற்போது சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. தற்போது லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், இந்து சமய அறநிலையத்துறையில் நிலவும் ஊழல் புகார்களுக்கு மேலும் ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது. இவருடன் தொடர்புடைய பிற முறைகேடுகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil