Dailyhunt
மகா சிவராத்திரி 2026.. இரவு கண்விழிக்கும்போது கட்டாயம் செய்ய வேண்டியவை..

மகா சிவராத்திரி 2026.. இரவு கண்விழிக்கும்போது கட்டாயம் செய்ய வேண்டியவை..

TV9 Tamil 2 months ago

கா சிவராத்திரி என்பது சிவபெருமானை முழு மனதுடன் தியானித்து வழிபடுவதற்கான மிகப் புனிதமான நாளாகும். இந்த நாளில் இரவு முழுவதும் கண்விழித்து இருந்து இறைவனை நினைத்து வழிபடுவது மிகவும் புண்ணியமானதாக கருதப்படுகிறது.

சிவராத்திரி இரவில் விழித்திருந்து செய்யப்படும் வழிபாடுகள் மன அமைதியையும் ஆன்மீக முன்னேற்றத்தையும் அளிப்பதாக சைவ மரபில் கூறப்படுகிறது.

சிவராத்திரி இரவில் முதன்மையாக செய்ய வேண்டியது சிவபெருமானை தியானிப்பதாகும். 'ஓம் நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து மனதை ஒருமுகப்படுத்தி சிவனை நினைத்து தியானிக்க வேண்டும். குறிப்பாக நள்ளிரவு நேரத்தில் செய்யப்படும் தியானம் மிகுந்த பலன் தரும் என நம்பப்படுகிறது. இந்த தியானம் மன சுத்தத்தையும் ஆன்மீக தெளிவையும் அளிக்கிறது.

அதேபோல் சிவபுராணம், திருவாசகம், தேவாரம் போன்ற சிவபெருமானைப் பற்றிய புனித நூல்களைப் பாராயணம் செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த நூல்களை முழுமையாகப் படிப்பது 'முற்றோதல்' என்று அழைக்கப்படுகிறது. இதை சிவராத்திரி நாளில் செய்வதால் மனம் இறைவன் மீது நிலைத்து, தூக்கம் வராமல் இருக்கும். மேலும் சிவபெருமானின் திருநாமங்களை பாடுதல் அல்லது சிவநாம சங்கீர்த்தனம் செய்வதும் பக்தியை வளர்க்கும்.

சிவராத்திரி இரவில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபடுவதும் முக்கியமானதாகும். முதல் காலம் (மாலை 7.30 மணி), இரண்டாம் காலம் (இரவு 10.30 மணி), மூன்றாம் காலம் (நள்ளிரவு 12 மணி), நான்காம் காலம் (அதிகாலை 4.30 மணி) ஒவ்வொரு காலத்திலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வில்வ இலை சமர்ப்பித்து அர்ச்சனை செய்யலாம். கோயில்களில் நடைபெறும் பூஜைகள், பக்திப் பாடல்கள் மற்றும் சொற்பொழிவுகளில் கலந்து கொள்வதும் விழித்திருப்பதற்கு உதவும்.

மேலும் இந்த இரவில் ஆன்ம சிந்தனை செய்து தன்னிலை ஆராய்வதும் அவசியமாகும். மனதில் உள்ள அகந்தை, தீய எண்ணங்கள் போன்றவற்றை நீக்கி இறைவனை உள்ளத்தில் உணர முயற்சிக்க வேண்டும். இறைவனை வெளியில் மட்டும் அல்லாமல் உள்ளத்திலும் உணர்வதே உண்மையான வழிபாடு என சைவ சித்தாந்தம் வலியுறுத்துகிறது. இவ்வாறு சிவராத்திரி இரவு முழுவதும் கண்விழித்து தியானம், பாராயணம், பூஜை மற்றும் ஆன்ம சிந்தனை ஆகியவற்றில் ஈடுபடுவது மிகுந்த ஆன்மீக பலனை அளிக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil