Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தை மறித்து பறக்கும் படையினர் அதிரடி சோதனை..

முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தை மறித்து பறக்கும் படையினர் அதிரடி சோதனை..

TV9 Tamil 2 months ago
Tamilnadu Polls 2026: திருவாரூரில் இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் இருந்து சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனத்தை மறித்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  அவ்வாறு, நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 573 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

முதல் நாளிலேயே வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பு:

மொத்தம் 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 06, 2026 அன்றுடன் முடிவடைய உள்ளது. இந்த 8 நாட்களில் 4 நாட்கள் விடுமுறை என்பதால் மொத்தம் 4 நாட்கள் மட்டுமே வேட்பாளர்களுக்கு மனுதாக்கல் செய்ய நேரம் உள்ளது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கலின் முதல் நாளான நேற்றே மூன்று கட்சித் தலைவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதாவது கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே நேரத்தில் பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிறகு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், காரைக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வர்:

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கட்டமாக தனது சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். திருவாரூர் தெற்குரத வீதியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து, நன்னிலம் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது முபாரக், மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை ஆதரித்து வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.

முதல்வர் வேனை நிறுத்திய அதிகாரிகள்:

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் நோக்கி புறப்பட்டார். தஞ்சாவூர் அருகே சாலியமங்கலத்தில் அவர் சென்ற பிரச்சார வேனை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை மேற்கொண்டார்கள்.

சோதனைக்கு பின்பு அனுமதி:

முதலமைச்சர் அமர்ந்திருந்த முன்பகுதி கதவை திறந்து வேனில் ஏதும் இருக்கிறதா? என்று சோதனை நடத்தினார்கள். வேனின் பின்பகுதி கதவையும் திறந்து சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பெண் போலீசாரும் ஈடுபட்டனர். தொடர்ந்து, முதலமைச்சரின் வாகனத்தில் எதுவும் இல்லாததால் சோதனைக்கு பிறகு முதலமைச்சரின் வாகனத்தை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil