Dailyhunt
"நாங்கள் சங்கி என்றால், பாஜகவோடு கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா?".. முதல்வருக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!!

"நாங்கள் சங்கி என்றால், பாஜகவோடு கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா?".. முதல்வருக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!!

TV9 Tamil 1 month ago
Tamilnadu Polls 2026: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் 3 மாதத்தில் போதைப்பொருள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சிவகங்கையில் அதிமுக சார்பில் செந்தில்நாதன், காரைக்குடியில் அமமுக சார்பில் தேர்போகி பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் திருப்புத்தூர், மானாமதுரை தொகுதிகளில் பாஜக கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை சிவகங்கையில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அதிமுக பக்கபலமாக இருக்கும்:

அப்போது அவர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுகளுக்கு அதிமுக பக்கபலமாக இருக்கும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ரூ.5 லட்சம் அதிமுக அரசு வந்தவுடன் வழங்கும். இப்போது உள்ள ஆன்லைன் முறையை ரத்து செய்து விட்டு ஏற்கனவே உள்ள பழைய முறையை நடைமுறைப்படுத்துவோம். ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தை அரசே செலுத்தும் என்றார்.

கருணாநிதி சங்கியா?

தோல்வி பயத்தில் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் காலை பிடித்து கெஞ்சி கூத்தாடி கூட்டணி வைத்து இருக்கிறார். எங்களை சங்கி என்று கூறுகிறீர்கள். ஏற்கனவே உங்கள் தந்தை கருணாநிதி பாஜகவோடு உடன்பாட்டில் இருந்தாரே அப்போது அவர் சங்கியா? திமுக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டு காலத்தில் 18 ஆயிரம் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். கோர்ட்டு மூலமாக 6 ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சிறுமிகள், பெண்கள், ஏன் மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை.

போதைப்பொருள் இல்லாத மாநிலம்:

சிவகங்கை மாவட்டத்தில் கஞ்சா போதை ஆசாமிகள் சாலையில் நிற்பவர்களை எல்லாம் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குகிறார்கள். இப்படிப்பட்ட ஆட்சி நடத்துகிற மு.க.ஸ்டாலின் எங்களை பற்றி பேசுகிறார். தற்போது எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. இந்த ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் நிச்சயமாக தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிக்கப்படும். போதைப்பொருள் அறவே இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகும். போதைப்பொருள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்துவோம்.

திமுக ஆட்சியில் மின் கட்டணங்கள் உயர்வு:

திமுக ஆட்சியில் புகைப்பட சூட்டிங் எடுப்பதுதான் சாதனையாக உள்ளது. வேறு எந்த ஒரு சாதனையும் கிடையாது. இந்த ஆட்சியில் மின் கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்களை அறிவிப்போம் என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil