Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஓ! அடிக்கடி கண் துடிக்கிறதா? பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

ஓ! அடிக்கடி கண் துடிக்கிறதா? பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

TV9 Tamil 22 hrs ago
நம் வாழ்வில் எப்போதாவது ஒருமுறையோ அல்லது தொடர்ச்சியாகவோ கண் இமைகள் தன்னிச்சையாகத் துடிப்பதை அனுபவித்திருப்போம்.
பொதுவாக, "வலது கண் துடித்தால் நல்லது, இடது கண் துடித்தால் கெட்டது" அல்லது ஏதோ சகுனம் பார்க்கிறார்கள் என்று நம்மில் பலர் இதை ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் கடந்து செல்வதுண்டு. ஆனால், இதற்குப் பின்னால் பல எளிய மற்றும் முக்கியமான அறிவியல் மற்றும் மருத்துவக் காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவ உலகத்தில் 'மயோக்கிமியா' (Myokymia) என்று அழைக்கப்படும் இந்த கண் துடிப்பு பிரச்சனை எதனால் ஏற்படுகிறது என்பது குறித்த தகவல்களைத் தொகுத்து கீழே விரிவாகப் பார்ப்போம்.

கண் துடிப்பதற்கான முக்கியக் காரணங்கள்:

அதிகப்படியான மன அழுத்தம் (Stress & Anxiety): இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மன அழுத்தம் என்பது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு மூலக்காரணமாக உள்ளது. அந்த வகையில், மன உளைச்சல் மற்றும் கவலை அதிகரிக்கும் போது அது நரம்பு மண்டலத்தை பாதித்து கண் தசைகளில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மை மற்றும் உடல் சோர்வு: இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது, அலைச்சலால் ஏற்படும் சோர்வு அல்லது போதுமான தூக்கம் இல்லாதது போன்றவையும் கண் இமைகள் துடிப்பதற்கான பொதுவான காரணங்களாகும். உடல் ஓய்வை எதிர்பார்ப்பதற்கான அறிகுறியாகக் கூட இதைக் கருதலாம். அதிகப்படியான காஃபின் மற்றும் மதுப்பழக்கம்: காபி, டீ அல்லது எனர்ஜி டானிக்ஸ் போன்ற காஃபின் நிறைந்த பானங்களை அளவுக்கு அதிகமாக அருந்தினாலும், மது மற்றும் புகையிலை பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுக்கும் கண் தசைகளில் நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் (Eye Strain): கணினி, மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்போன் திரைகளை இடைவேளையின்றி நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பது, அல்லது பார்வைக் கோளாறு காரணமாக கண்களுக்குத் தேவையான கண்ணாடி அணியாமல் சிரமப்படுவது போன்ற காரணங்களால் கண் தசைகள் சோர்வடைந்து துடிக்கத் தொடங்குகின்றன. உலர் கண்கள் (Dry Eyes): கண்கள் வறண்டு போவது அல்லது ஒவ்வாமை (Allergy) காரணமாக கண் இமைகளில் ஏற்படும் எரிச்சல் போன்றவையும் இந்த தன்னிச்சையான அசைவுக்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்து குறைபாடு: நம் உடலில் மக்னீசியம் (Magnesium) அல்லது சில வைட்டமின் சத்துக்களின் பற்றாக்குறை ஏற்படும் போதும் தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டு கண் இமை துடிக்கும் பிரச்சனை தலைதூக்கலாம்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கண் துடிப்பு என்பது சில வினாடிகள் அல்லது நிமிடங்களில் தானாகவே சரியாகிவிடும். இதற்கு எந்தவிதமான மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை. ஆனால், கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுகுவது நல்லது: கண் துடிப்பு தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால். கண் இமைகள் முழுமையாக மூடிக் கொள்ளும் அளவிற்கு பிரச்சனை தீவிரமானால். முகத்தின் மற்ற பகுதிகளுக்கும் நடுக்கம் பரவத் தொடங்கினால். கண்ணில் இருந்து சிவந்து போதல், நீர் வடிதல் அல்லது பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil