தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பரபரப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதன்படி, 50 ஆண்டுகால திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுக ஆகிய வரலாற்றுக் கட்சிகளை தமிழக வெற்றி கழகம் முதல் தேர்தலிலேயே பின்னுக்கு தள்ளி உள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில், தமிழக வெற்றி கழகம் 109 சட்டமன்ற தொகுதிகளிலும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 73 சட்டமன்ற தொகுதிகளிலும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 52 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதில், அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் களம் கண்ட முதல் தேர்தலிலேயே 100- க்கும் மேற்பட்ட தொகுதிகளை தன் வசப்படுத்தி உள்ளது.
எம்ஜிஆர்- க்கு பிறகு விஜய் தலைமையில் ஆட்சி மாற்றம்
இதன் காரணமாக கடந்த 1977- ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதன் மூலம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட கட்சிகள் இல்லாத முதல் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. ஒரே தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்த எம்.ஜி.ஆருக்கு பிறகு, 49 ஆண்டுகள் கழித்து 2026- ஆம் ஆண்டில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். இதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.திமுகவை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கும் தவெக
தமிழகத்தில் இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்கும் என்ற முனைப்பில் தேர்தலை எதிர்கொன்ற அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதில், திமுக 3- ஆவது இடத்தில் பின்தங்கி உள்ளது. திமுகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தேர்தல் பணியாற்றிய அதிமுக 2- ஆவது இடத்தில் தள்ளப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தி என்ற முழக்கத்துடன் முன்னேறி வந்த தமிழக வெற்றிக்கழகம் பெரும்பாலான தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தொடர்ந்து பின்னிலை வகுத்து வருகிறது. தற்போது வரை நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதிகளில் கூட முன்னிலை பெறவில்லை.
