Dailyhunt
"ஒரு மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்தவள் தான் நான்".. மன்னிப்பு கேட்ட அமைச்சர் கீர்த்தனா..

"ஒரு மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்தவள் தான் நான்".. மன்னிப்பு கேட்ட அமைச்சர் கீர்த்தனா..

TV9 Tamil 4 days ago

மே 14, 2026: புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் கீர்த்தனா தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தொடக்கம் முதலே பல்வேறு விஷயங்களில் அவர் சற்று கவனக்குறைவாக செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில், 'மாற்றுத்திறனாளிகள் குறித்து மரியாதை குறைவாக பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை.

நானும் ஒரு மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்தவள்தான்' என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவும் வெளியிட்டுள்ளார்.

சான்றிதழை மறந்த அமைச்சர் கீர்த்தனா:

அமைச்சர் கீர்த்தனா, இளம் வயதில் அமைச்சராக பொறுப்பேற்ற பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆனால், சட்டப்பேரவை கூட்டத்தொடர் மே 11ஆம் தேதி தொடங்கியபோது, 234 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அப்போது, இவர் பதவியேற்பதற்கு முன்னதாக தனது வெற்றிச் சான்றிதழை கொண்டு வராதது கவனத்தை ஈர்த்தது. இதனால் அவரால் உடனடியாக பதவியேற்க முடியாமல் போனது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. 'ஒரு எம்.எல்.ஏ.வாக இருந்தும் தனது வெற்றிச் சான்றிதழை எப்படி மறந்தார்?' என பலரும் விமர்சனம் செய்தனர். பின்னர், உடனடியாக வெற்றிச் சான்றிதழ் கொண்டு வரப்பட்டதையடுத்து, அன்றைய தினமே அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

 தமிழக அரசின் புதிய அட்வகேட் ஜெனரல் நியமனம்… யார் இந்த விஜய் நாராயணன்?

ஊனமுற்றோர் என்ற வார்த்தையை பயன்படுத்திய அமைச்சர்:

மேலும், ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, 'மாற்றுத்திறனாளிகள்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு பதிலாக 'ஊனமுற்றோர்' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருமுறை மட்டுமல்லாமல், செய்தியாளர் சந்திப்பில் இரண்டு அல்லது மூன்று முறை அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. 'மாற்றுத்திறனாளிகள்' என்ற மரியாதைமிக்க சொல்லாடல் பயன்பாட்டில் இருக்கும் சூழலில், மீண்டும் 'ஊனமுற்றோர்' என்ற சொல்லைப் பயன்படுத்தியது கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.

மன்னிப்பு கேட்ட அமைச்சர் கீர்த்தனா:

இந்த நிலையில், அமைச்சர் கீர்த்தனா இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், 'அண்மையில் நான் தெரிவித்த கருத்துகள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை அறிகிறேன். மாற்றுத்திறனாளிகள் குறித்து மரியாதை குறைவாக பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் கிடையாது. மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்த மகள்தான் நான். அந்த வலியும் வேதனையும் எனக்கும் தெரியும்.

அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் யாரையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக மனமார்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil