Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு; ரங்போ-ரோர்தாங் சாலை போக்குவரத்து துண்டிப்பு

சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு; ரங்போ-ரோர்தாங் சாலை போக்குவரத்து துண்டிப்பு

TV9 Tamil 15 hrs ago

ஜூன் 23, 2026: தீஸ்தா, தோர்சா, ஜல்தாக்கா, ராய்டாக், மகானந்தா உள்ளிட்ட அனைத்து முக்கிய நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மலைப்பகுதிகளில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் நிலைமை மோசமடைந்துள்ளது. இதன் மத்தியில், சிக்கிமின் ரங்போ-ரோர்தாங் சாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் மலைப்பகுதியின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் சாலை சேதமடைந்ததுடன், அங்கு இருந்த ஒரு ஸ்கூட்டரும் நொறுங்கியது. எனினும், சிலிகுரியிலிருந்து சிக்கிம் செல்லும் போக்குவரத்தில் தற்போது பெரிய பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிமில் கடுமையான நிலச்சரிவு:

கஜல்டோபா பகுதியில் உள்ள தீஸ்தா அணையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல், மகானந்தா அணையின் கதவுகளும் குறிப்பிட்ட இடைவெளியில் திறக்கப்பட்டு வருகின்றன. தீஸ்தா நதியின் கீழ்ப்பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அணை சுற்றுவட்டார பகுதிகளில் நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

மறுபுறம், தார்ஜிலிங் மற்றும் காலிம்பாங் பகுதிகளில் நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 110-இல் பழுதுபார்ப்பு பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. சிலிகுரியிலிருந்து தார்ஜிலிங் செல்லும் துதியா பாலம் பகுதியைத் தவிர மற்ற சாலைகளில் போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது. தீஸ்தா பஜார் பகுதிகளில் சில நேரங்களில் வெள்ளநீர் புகுந்தாலும், மழை குறைந்தவுடன் நீர் வடிந்து செல்கிறது.

ஆனால் சிக்கிமின் பல பகுதிகளில் இன்னும் பாதிப்பு நீடித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை ரங்போ-ரோர்தாங் சாலையில் திடீரென மலைச்சரிவு ஏற்பட்டது. சிலரின் கண்முன்னே மலைப்பகுதியின் ஒரு பகுதி சரிந்து விழுந்த நிலையில், உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், அந்தச் சாலையில் தற்போது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய மோசமான வானிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கணிசமாக குறைந்துள்ளது. ஹிமாலயன் ஹாஸ்பிடாலிட்டி அண்ட் டூரிசம் டெவலப்மென்ட் நெட்வொர்க் அமைப்பின் செயலாளர் சம்ராட் சன்யால் கூறுகையில், 'தார்ஜிலிங்கில் துதியா பாலம் பகுதியைத் தவிர மற்ற பெரும்பாலான சாலைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. மாநில அரசும் பல உதவி எண்கள் மூலம் சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் சிக்கிமில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள்தான் அதிக சிரமத்தை ஏற்படுத்துகின்றன' என்றார்.

மேலும், 'தேசிய நெடுஞ்சாலை 10 மூடப்பட்டால் மாற்று வழியாக பயன்படுத்தப்படும் ரங்போ-ரோர்தாங் சாலையிலும் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சிக்கிம் நிர்வாகம் போக்குவரத்தை விரைவில் சீரமைக்க முயற்சி செய்து வருகிறது' என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை, சிலிகுரி அருகே உள்ள குல்மா பகுதியில் ரயில்வே நிர்மாணித்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது. குல்மாவிலிருந்து துரிபாரி வரை மகானந்தா வனவிலங்கு சரணாலயத்தின் வழியாகச் செல்லும் அந்தப் பாலம், அப்பகுதி மக்களால் நடைபாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil