Dailyhunt
தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி..

தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி..

TV9 Tamil 3 weeks ago

சென்னை, ஏப்ரல் 8, 2026: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில், தமிழக தலைமை செயலாளர் மாற்றம் செய்யப்பட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் தரப்பில் முழு வீச்சில் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட தமிழக அரசின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக தலைமை செயலாளர் இடமாற்றம்:

இந்த நிலையில், தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் இடமாற்றம் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது தலைமை செயலாளராக சாய் குமார், ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக செயல்பட்டு வந்த டேவிட்சன் தேவ ஆசீர்வாதமும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல், ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்:

அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு பல மாவட்ட ஆட்சியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் 8 ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். குறிப்பாக, பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த ஆர். ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

மருத்துவர் கே. கோபால் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த சினேகா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக மாற்றப்பட்டார்.

அதேபோல், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியராக இருந்த ரவிக்குமார், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக மாற்றப்பட்டார்.

 தமிழகத்தில் முதன் முறையாக வாக்களிக்கும் 14.59 லட்சம் பேர்.. வெளியான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல்..

நிர்வாக தேவைகள் மற்றும் பொதுநலன் கருதி சில மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக தலைமை செயலாளர் பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil