Dailyhunt
தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்..!

தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்..!

TV9 Tamil 1 week ago
மிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிற சுங்கச்சாவடிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 77 சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு உயர்த்தப்படுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் போக்குவரத்து அளவு, சாலை பராமரிப்பு செலவு, பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும்.

ஒப்பந்த அடிப்படையிலான கட்டண மாற்றம்

மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டண உயர்வு காலமும் மாறுபடுகிறது. 1992ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதேபோல் 2008ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்தில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

60 சுங்கச்சாவடிகளில் உயர்வு நடைமுறை

அதன்படி, தமிழகத்தில் நள்ளிரவு 12 மணி முதல் மொரட்டாண்டி, பல்லிக்கொண்டா, பெடகல்லுப்பள்ளி (வாணியம்பாடி), கானியூர், கிருஷ்ணகிரி, பரனூர், ஆத்தூர் (திண்டிவனம்), மாதூர், நல்லூர், சூரப்பட்டு, வானகரம், ஸ்ரீபெரும்புதூர் (பென்னலூர்), சென்னைசமுத்திரம், எஸ்.வி.புரம், பட்டரைப்பெரும்புதூர், கல்லக்குடி, மணகத்தி, குருங்குடி (வீராணநல்லூர்), நாங்கிலிகொண்டான் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம்

இந்த 60 சுங்கச்சாவடிகளிலும் 5% முதல் 7% அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கார், ஜீப், வேன் போன்ற லேசான வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ரூ.10 முதல் ரூ.40 வரையும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தினசரி பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து செலவுகளில் சிறியளவு அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ் உயர்வு

மேலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.300 முதல் ரூ.350 வரையும், வருடாந்திர பாஸ் கட்டணம் ரூ.3,000லிருந்து ரூ.3,075 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மற்றும் தொழில்வாரியான பயணிகளுக்கு கூடுதல் செலவு சுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. : இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலையும் அதிகரிக்கும்.. 

5 ஆண்டுகளில் வசூல் நிலவரம்

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 2021 முதல் 2026 வரை மொத்தமாக ரூ.18,865.14 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் 2021-22ம் ஆண்டில் ரூ.2,649.35 கோடி, 2022-23ம் ஆண்டில் ரூ.3,758.23 கோடி, 2023-24ம் ஆண்டில் ரூ.4,157.96 கோடி, 2024-25ம் ஆண்டில் ரூ.4,300 கோடி, 2025-26ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை ரூ.4,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி - தோப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ரூ.275.13 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்சமாக மீன்சுருட்டி - சிதம்பரம் பிரிவில் உள்ள குருங்குடி சுங்கச்சாவடியில் ரூ.2.55 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil