Dailyhunt
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. எஸ்.பி வேலுமணி தரப்பிலான அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு..

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு.. எஸ்.பி வேலுமணி தரப்பிலான அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு..

TV9 Tamil 4 days ago
மிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக்கழக அரசின் நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த எஸ்.பி.
வேலுமணி பேசத் தொடங்கினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலையிட்டு, எஸ்.பி. வேலுமணிக்கு பேச அனுமதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய எஸ்.பி. வேலுமணி, 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தொடர வேண்டும். நாங்கள் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் அல்ல,' என்று தெரிவித்தார். மேலும், மக்கள் தீர்ப்பை மதித்து, தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு:

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால், பெரும்பான்மையுடன் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து, மே 10ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, மூன்று நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த சூழலில், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த எடப்பாடி பழனிசாமி:

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி பேசத் தொடங்கினார். ஆனால், 'ஒரே கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் எப்படி பேசலாம்?' என பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் பிரபாகர் தலையிட்டு, 'யார் பேச வேண்டும் என்பதை முடிவு செய்வது எனது உரிமை. சட்டசபையில் கட்சித் தலைவர் எடுக்கும் முடிவு அல்ல; சபாநாயகராக நான் எடுப்பதே இறுதி முடிவு. பேச வாய்ப்பு தருங்கள் என எஸ்.பி. வேலுமணி கோரிக்கை விடுத்ததால், அவரை பேச அனுமதித்துள்ளேன்,' என குறிப்பிட்டார்.

எஸ்.பி வேலுமணி தரப்பு ஆதரவு:

அதனைத் தொடர்ந்து பேசிய எஸ்.பி. வேலுமணி, தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார். அதாவது, அதிமுக இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 14 சட்டமன்ற உறுப்பினர்களும், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுக பிரிவில் 30 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். எனவே, எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். மேலும், 'நாங்கள் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் அல்ல. மக்கள் தீர்ப்பை மதித்து இந்த அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்,' என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கே என்ன குதிரை பேரமா  நடக்கிறது?

சட்டசபையில் அதிமுக இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினருக்கு இடையே வார்த்தைப் போர் வெடித்தது. எஸ்.பி. வேலுமணி பேசி முடித்த பிறகு, எடப்பாடி பழனிசாமி, 'நான் இருக்கும்போதே எனது அனுமதி இல்லாமல் எம்.எல்.ஏ.க்கள் பேசுவது எந்த விதத்தில் நியாயம்? இங்கு என்ன குதிரைப் பேரமா நடக்கிறது?' என்று கேள்வி எழுப்பினார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil