தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வரும் வேளையில், அதிமுக முக்கியப் புள்ளியும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் அக்கட்சியில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்துள்ளார்.
அதிமுக-வின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் சமீபத்திய அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், நேற்று இரவு (மே 27, 2026) வெல்லமண்டி நடராஜன் அதிமுக-வில் இருந்து தனது விலகல் முடிவை எடுத்தார். அதனைத் தொடர்ந்து, அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தவெக கட்சியின் கொள்கைகளை ஏற்று, தன்னை அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அடுத்தடுத்து தவெகவில் இணையும் நிர்வாகிகள்:
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் பல்வேறு உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, சி.வி.சண்முகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் கட்சி இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டது. இதில் சி.வி. சண்முகம் அணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலர், தங்களது பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், அரசியல் எதிர்காலத்திற்காகவும் எடப்பாடி பழனிசாமி அணியில் மீண்டும் இணைந்து மன்னிப்புக் கடிதம் வழங்கினர். அதேசமயம், சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. அவ்வாறு ஜெயகுமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.மீண்டும் அதிமுகவில் இணைந்த வேலுமணி அணியினர்:
இந்நிலையில், இரு அணியினருக்கும் இடையே சுமுகப் பேச்சுவார்த்தை நடந்ததைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி அணியினர் மீண்டும் அதிமுக-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். இந்த முக்கிய சந்திப்பில் சி.வி.சண்முகம் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவரும் தங்களது பக்கமே (அதிமுக-விலேயே) நீடிப்பதாக எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்.அரசியல் முக்கியத்துவம்:
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக-விலிருந்து எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் தவெக நோக்கி நகர்ந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் இந்தத் தாவல் திருச்சி மண்டலத்திலும், ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் அதிமுக-வுக்கு மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதிமுக-வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான வெல்லமண்டி நடராஜன் தவெக-வில் இணைந்துள்ளது, விஜய்யின் கட்சிக்கு அடித்தட்டு மக்களிடமும், பழைய அரசியல் வட்டாரத்திலும் தங்களது செல்வாக்கை மேலும் பலப்படுத்திக் கொள்ள உதவும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
