Dailyhunt
திமுக-பாஜகவை நம்பாதீர்கள்; என்னை 100% நம்புங்கள்.. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் - திருச்சியில் விஜய் பரப்புரை..

திமுக-பாஜகவை நம்பாதீர்கள்; என்னை 100% நம்புங்கள்.. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் - திருச்சியில் விஜய் பரப்புரை..

TV9 Tamil 2 weeks ago

திருச்சி, ஏப்ரல் 2, 2026: 'திமுக, பாஜகவை நம்பாதீர்கள். ஆனால், 100 சதவீதம் என்னை நம்புங்கள். உங்களுக்காக நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உங்கள் தேவைக்காக வந்திருக்கிறேன்,' என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது திருச்சி பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.  2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

அந்த வகையில், மார்ச் 30ஆம் தேதி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அவர், இன்று திருச்சி கிழக்கு பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருச்சியில் விஜய் பிரச்சாரம்:

அதனைத் தொடர்ந்து, திருச்சியில் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் வாகனத்தில் இருந்து வெளியே வந்து மக்களிடையே பேசிய அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 ஏப்ரல் 6ம் தேதி கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் வைகோ.. முழு அட்டவணை இதொ..

சிலிண்டர் பிரச்சனை - முதல்வர் டெல்லி சென்று வலியுறுத்தலாமே?

அவர் கூறியதாவது: 'டி கடை, உணவகம் போன்ற பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள்தான் முழுக் காரணம். ஸ்டாலின் சார் ஏதாவது பிரச்சினை என்றால் டெல்லிக்கு பறந்து சென்று விடுவார். ஆனால், ஏன் அங்கு சென்று மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்தவில்லை?

நாங்கள் சொல்வதை செய்வோம். அன்னபூரணி கேஸ் திட்டம் நிறைவேற்றப்படும்; ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் என உறுதி அளித்தோம். கேஸ் மானியம், பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

எனக்கு எதிராக கூட்டு சூழ்ச்சி நடக்கிறது:

எதையும் செய்ய முடியாதபோது, வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுவதே இவர்களின் வேலை. கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சி. 'ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிடாமல் தடுத்தது ஒரு கூட்டு சூழ்ச்சி. இந்த தேர்தலில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற பயத்தில் தடுத்துள்ளனர்.

எனக்கு ஏற்பட்ட அநீதிக்காக மட்டும் அல்ல; உங்களுக்கான நீதி கேட்கவும் நான் வந்துள்ளேன். 100 சதவீதம் நியாயமான ஆட்சியை கொடுப்போம். இந்த விஜயை நீங்கள் நம்பலாம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன்?

எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்:

நகராட்சி துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் ஏமாற்றியுள்ளனர். வேலை வழங்காமல், அந்தத் துறையில் மட்டும் ஆயிரம் கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. மற்ற துறைகளில் எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

எவ்வளவு வசதியான வாழ்க்கை இருந்தாலும், அதை எல்லாம் துறந்து உங்கள் கடனைச் செலுத்த வந்துள்ளேன். அனைத்து சிரமங்களையும் தாங்கி, உங்களுக்காகவே இங்கு வந்திருக்கிறேன். 100 சதவீதம் என்னை நம்புங்கள். நியாயமான ஆட்சியை நாங்கள் வழங்குவோம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

பெண்கள் அனைவரும் எந்தப் பேருந்திலும் இலவசமாக பயணம் செய்யலாம். கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர், சாலை வசதி, பஸ் போக்குவரத்து போன்ற அடிப்படை தேவைகளில் தான் எங்கள் முதல் கவனம் இருக்கும்,' என அவர் தெரிவித்தார்.

மேலும், வரக்கூடிய ஏப்ரல் 23ஆம் தேதி அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil