Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திருமணம் நெருங்க நெருங்க டென்ஷனா? பதற்றத்தை விரட்ட இதை பண்ணுங்க!

திருமணம் நெருங்க நெருங்க டென்ஷனா? பதற்றத்தை விரட்ட இதை பண்ணுங்க!

TV9 Tamil 1 day ago
திருமணத்திற்கு முன் பதற்றம், எதிர்பார்ப்பு மற்றும் எதிர்காலம் குறித்த பயம் ஏற்படுவது இயல்பானது. திருமண ஏற்பாடுகள், செலவுகள், குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகள் போன்றவை மன அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
எதிர்கால துணையிடம் மனதில் உள்ள கவலைகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது நிம்மதியை அளிக்கும். திருமண ஏற்பாடுகளின் அனைத்து பொறுப்புகளையும் தனியாக ஏற்காமல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. தினசரி ஓய்வு, நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றுக்கு நேரம் ஒதுக்குவது மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். திருமண நாள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்ற அதிகப்படியான எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்வது அவசியம். பதற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்து அன்றாட வாழ்க்கையை பாதித்தால் மனநல ஆலோசகரின் உதவியை நாடுவது பயனுள்ளதாக இருக்கும்.

எதிர்பார்ப்பும் பதற்றமும்

திருமணம் என்பது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான நிகழ்வாகும். இதனால் திருமண ஏற்பாடுகள் தொடங்கியதும் மகிழ்ச்சியுடன் சேர்த்து பதற்றம், குழப்பம், பயம் போன்ற உணர்வுகளும் சிலருக்கு ஏற்படலாம். திருமண நாள் நெருங்கும்போது ஏற்பாடுகள், உறவினர்களின் எதிர்பார்ப்புகள், செலவுகள் மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்த சிந்தனைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

பதற்றத்திற்கான காரணங்கள்

திருமணத்திற்கு முன்பான கவலைக்கு ஒரே காரணம் இருக்க வேண்டிய அவசியமில்லை. திருமண நிகழ்ச்சி திட்டமிடுதல், குடும்பத்தினரின் விருப்பங்களை சமாளித்தல், புதிய வாழ்க்கை முறைக்கு மாறுவது, துணையுடன் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் போன்றவை மனதில் பல்வேறு கேள்விகளை உருவாக்கலாம். குறிப்பாக எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற அதிகப்படியான எதிர்பார்ப்பு, தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இயல்பான உணர்வுதான்

திருமணத்திற்கு முன் சிறிதளவு தயக்கம் அல்லது பதற்றம் ஏற்படுவது தவறான முடிவை எடுத்துவிட்டோம் என்பதைக் குறிக்காது. வாழ்க்கையின் முக்கியமான கட்டத்திற்குள் நுழையும்போது இயல்பாகவே உற்சாகத்துடன் சில அச்சங்களும் கலக்கலாம். இருப்பினும் தொடர்ந்து அதிகமான சந்தேகம் அல்லது மன உளைச்சல் ஏற்பட்டால், அந்த உணர்வுகளை அலட்சியம் செய்யாமல் கவனிப்பது அவசியம்.

துணையிடம் பேசுங்கள்

மனதில் இருக்கும் கவலைகளை தனியாக வைத்துக்கொள்வதைவிட எதிர்கால துணையிடம் வெளிப்படையாகப் பேசுவது உதவியாக இருக்கும். திருமணம் குறித்த எதிர்பார்ப்புகள், பயங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை இருவரும் அமைதியாகப் பகிர்ந்து கொள்வது ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள உதவும். கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் உடனடியாக வாதமாக மாற்றாமல், ஒருவரின் உணர்வை மற்றொருவர் புரிந்துகொள்ள முயற்சிப்பது முக்கியம்.

உங்களுக்கான நேரம்

திருமண ஏற்பாடுகளில் முழுமையாக மூழ்கிவிடாமல், தினமும் சிறிது நேரத்தை ஓய்வுக்காக ஒதுக்குவது அவசியம். நடைப்பயிற்சி, தியானம், பிடித்த இசை கேட்பது, புத்தகம் வாசிப்பது அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது போன்ற எளிய செயல்கள் மனதை இலகுவாக்க உதவும். திருமண வேலைகளிலிருந்து அவ்வப்போது சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வதும் மன அழுத்தத்தை குறைக்க உதவும். : குழந்தையை அப்பா பார்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

எதிர்பார்ப்புகளை குறையுங்கள்

திருமண நாள் தாங்கள் நினைத்தபடி நூறு சதவீதம் நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சில நேரங்களில் பதற்றத்தை அதிகரிக்கலாம். சிறிய மாற்றங்கள் அல்லது எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டாலும் அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். திருமண நிகழ்வின் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கட்டுப்படுத்த முயற்சிப்பதைவிட, அந்த நாளை மகிழ்ச்சியாக அனுபவிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil