திருவாரூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்த ஆறு பேர் கொண்ட போதை கும்பல், மேஸ்திரியைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ள பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மகள் கண் முன்னே கொடூரம்:
வீட்டிற்குள் நுழைந்த அக்கும்பல், திருமுருகனைச் சரமாரியாக வெட்டத் தொடங்கியது. இதில், திருமுருகன் கொடூரமாக வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர், அக்கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த மூன்று இருசக்கர வாகனங்களில் ஏறி அங்கிருந்து தப்பியோடியது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த குடவாசல் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருமுருகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்த சுதா, தீவிர சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரக் கொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், உயிரிழந்த திருமுருகனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவாரூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள புதுக்குடி என்ற இடத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.காவல் துறை விசாரணை:
போராட்டம் நீடித்ததைத் தொடர்ந்து, திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் தனிப்படை அமைத்துக் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இக்கொலைச் சம்பவம் தொழில் போட்டி காரணமாக நடந்ததா அல்லது ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற பல கோணங்களில் குடவாசல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கச் சேங்காளிபுரம் பகுதியில் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.போலீசார் அளித்த விளக்கம்:
இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு திருவாரூர் காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதன்படி, திருமுகம் அப்பகுதியில் உள்ள செங்கல் காளவாயில் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சிலருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மே 29ம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில், எதிரிகள் திருமுகத்தின் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்துள்ளனர். அங்கு அவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி, வீட்டிலேயே வைத்து அவரைக் கொலை செய்துள்ளனர். கொலைச் சம்பவம் நடந்தபோது, திருமுகத்தின் மனைவி சுதா, அவரது மகன் மற்றும் மற்றொரு அறையில் இருந்த அவரது மகள் ஆகியோர் அதிர்ச்சியடைந்து அழுது கூச்சலிட்டுள்ளனர். இவர்களின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டை நோக்கி ஓடி வந்துள்ளனர். பொதுமக்கள் ஓடி வருவதைப் பார்த்த கொலையாளிகள், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்துச் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில், "மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தந்தை படுகொலை செய்யப்பட்டார்" என்று பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்று திருவாரூர் மாவட்ட காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
