கூகுள் (Google) நிறுவனம், ஸ்மார்ட்போன்களில் பழைய ஆண்ட்ராய்டு மென்பொருளை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு கடும் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
சாஃப்ட்வேர் அப்டேட் செய்யாத போன்களுக்கு ஆபத்து
கூகுள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தற்போது உலகளவில் சுமார் 40 சதவீதம் அளவுக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பழைய மென்பொருள் மூலமாகவே இயங்கி வருகின்றன. இதனால், அந்த சாதனங்களுக்கு வழக்கமான பாதுகாப்பு அப்டேட்கள் கிடைப்பதில்லை. இதை ஹேக்கர்கள் சாதகமாக பயன்படுத்தி, பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள், கடவுச்சொற்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை திருடும் அபாயம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையில், கூகுள் நிறுவனம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை வெளியிட்டுள்ள நிலையில், அதை தற்போதுவரை 7.5 சதவீதம் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் அப்டேட் செய்யாமல் ஆண்ட்ராய்டு 15 பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் இன்னும் ஆண்ட்ராய்டு 13 அல்லது அதற்கு முந்தைய அப்டேட்டுகளை மட்டுமே பயன்படுத்துவது பெரும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.எளிதில் ஊடுருவும் ஹேக்கர்கள்
பாதுகாப்பு அப்டேட்கள் இல்லாத போன்களில், ஹேக்கர்கள் எளிதாக ஊடுருவி, பயனர்களின் மெசேஜ்கள், அழைப்புகள், சமூக வலைதள கணக்குகள் மற்றும் வங்கி ஆப்ஸ்களை கண்காணிக்க முடியும். சில சமயங்களில், முழு போனையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, டேட்டாக்களை லாக் செய்து பணம் கேட்கும் ரான்சம்வேர் தாக்குதல்களும் நடக்கலாம் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, சுமார் 58 சதவீத ஆண்ட்ராய்டு போன்கள் மட்டுமே பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன. மீதமுள்ள 42 சதவீத போன்கள் சைபர் தாக்குதல்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 13க்கும் முந்தைய அப்டேட்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் உடனடியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க, பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை ஆண்ட்ராய்டு போன்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என்றும், அப்டேட் செய்ய முடியாத பழைய மாடல் போன்களை மாற்றிக் கொள்வது பாதுகாப்பானது என்றும் கூகுள் அறிவுறுத்தியுள்ளது. மென்பொருள் அப்டேட்கள் என்பது போன்களின் திறனுக்காக மட்டுமல்ல, தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் முக்கியமான பாதுகாப்பு கவசம் என்றும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
