Commercial LPG Cylinders: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஏப்ரல் மாத முதல் நாளான இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளன.
2வது முறையாக வணிக சிலிண்டர் விலை உயர்வு:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில், ஏப்ரல் மாதத்திற்கான விலையை இன்று மாற்றியமைத்த எண்ணெய் நிறுவனங்கள் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன. ஏற்கெனவே, அமெரிக்கா - ஈரான் போர் தொடங்கிய சில நாட்களில் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது போர் தொடங்கிய பிறகு 2வது முறையாக மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.மார்ச் 7ல் தான் விலை உயர்ந்தது:
மார்ச் 6ம் தேதி வரை ரூ.1,929க்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் திடீரென மார்ச் 7ம் தேதி விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு மாத தொடக்கத்தில் மட்டுமே கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக விலையை உயர்த்தின. அதன்படி, வணிக பயன்பாட்டு 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.115 உயர்ந்து, ரூ.2,043.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.மீண்டும் அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை:
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 01, 2026) வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று (மார்ச் 31, 2026) வரை ரூ.2,043.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேஸ் சிலிண்டர் தற்போது ரூ.2,240.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை:
வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது வழக்கம் போல வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.928-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்படாதது சாமானிய மக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.
