மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் (தசாவதாரம்) மூன்றாவது அவதாரம் வராஹ அவதாரம் ஆகும். அதர்மத்தை அழித்து, கடலுக்கடியில் மறைக்கப்பட்ட பூமாதேவியை மீட்டெடுத்த இந்த அவதாரத்தின் சிறப்புகளைக் காண்போம்.
செவ்வாய்கிழமை வராஹ ஹெயந்தி:
இந்த ஆண்டு ஏப்ரல் 7, செவ்வாய்க்கிழமை அன்று வராஹ ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (அங்காரக வாரம்) அன்று வராக ஜெயந்தி வருவது மிகவும் விசேஷமானது. செவ்வாய் பகவான் பூமி காரகன் என்பதால், நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இது உகந்த நாள். நல்ல நேரம் (காலை): 07:30 மணி முதல் 08:30 மணி வரை. நல்ல நேரம் (மாலை): 04:30 மணி முதல் 05:30 மணி வரை. ராகு காலம்: மாலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை. எமகண்டம்: காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை.வராஹ ஜெயந்தி வழிபாடு:
வராக அவதாரம் நிகழ்ந்த தினமே வராக ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வழிபடுபவர்களுக்கு நிலம், வீடு மற்றும் சொத்து தொடர்பான பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. வராக ஜெயந்தி அன்று அதிகாலையில் நீராடி, வீட்டின் பூஜை அறையில் மகாவிஷ்ணுவின் படத்தை அலங்கரிக்க வேண்டும். குறிப்பாக, வராக மூர்த்தி பூமாதேவியைத் தனது மடியில் அமர்த்தியிருக்கும் 'லட்சுமி வராகர்' படத்தை வழிபடுவது மிகச் சிறப்பு. பூஜையின் போது மகாவிஷ்ணுவின் நாமங்களையும், வராக அஷ்டகத்தையும் பாராயணம் செய்ய வேண்டும். "ஓம் நமோ பகவதே வராகரூபாய" என்ற மந்திரத்தைத் தியானிப்பது நற்பலன்களைத் தரும். சர்க்கரைப் பொங்கல், பாயசம் அல்லது துளசி தீர்த்தத்தை விஷ்ணுவிற்குப் படைத்து வழிபடலாம்.வழிபாட்டின் பலன்கள்:
சொத்து மற்றும் பூமி தொடர்பான சட்டச் சிக்கல்களில் இருப்பவர்கள் வராகரை வழிபட விரைவில் தீர்வு கிடைக்கும். ராகு மற்றும் கேது தோஷங்கள் உள்ளவர்கள் வராக மூர்த்தியை வணங்குவதன் மூலம் அதன் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். பயம் நீங்கி மன உறுதி பெறவும், எடுத்த காரியங்களில் வெற்றி பெறவும் வராக ஜெயந்தி வழிபாடு உறுதுணையாக இருக்கும். வராக மூர்த்தியை மனதார நினைத்து வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் உள்ள இருள் நீங்கி, பூமாதேவியைப் போல நாமும் அனைத்து நலன்களையும் பெறலாம்.
