Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விவசாயிகளுக்குச் சொந்தமான யூரியா கேரளாவுக்கு கடத்தல் ?  2 லாரிகளை மடக்கிப் பிடித்த விவசாயிகள்

விவசாயிகளுக்குச் சொந்தமான யூரியா கேரளாவுக்கு கடத்தல் ? 2 லாரிகளை மடக்கிப் பிடித்த விவசாயிகள்

TV9 Tamil 6 days ago
கோவை, ஜூலை 4 : கோவையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா உரத்தை டன் கணக்கில் கடத்தி, ரகசியக் குடோனில் திரவமாக மாற்றி கேரளாவுக்குக் கடத்த முயன்ற மெகா விவகாரத்தை, மதுக்கரை பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அதிரடியாக மடக்கிப் பிடித்துப் அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் ஜூலை 4, 2026 தலா ஒரு லாரி வீதம் இரண்டு பிரம்மாண்ட லாரிகள் வேகமாகச் சென்று கொண்டு இருந்தன. அப்போது, அந்த லாரிகளில் இருந்து யூரியா உரம் ஆங்காங்கே சாலையில் சிதறியபடி சென்று உள்ளது.

விவசாயிகளுக்குச் சொந்தமான யூரியா கேரளாவுக்கு கடத்தல் ?

இதைக் கவனித்த அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் உடனடியாக லாரிகளை விரட்டிச் சென்று மடக்கி நிறுத்தினர். லாரி ஓட்டுநர்களிடம், 'உரம் எங்கே கொண்டு செல்லப்படுகிறது ?'

என்று தட்டிக் கேட்ட போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதோடு, அருகில் உள்ள ஒரு தனியார் குடோனுக்கு யூரியா கொண்டு செல்வதாகக் கூறி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த விவசாயிகள், லாரியின் தார்பாயை ஏறித் திறந்து பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்தனர். அதில் இருந்தது முழுவதும் மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் 'அரசு யூரியா உரம்' என்பது தெரியவந்தது. இதை அடுத்து, அந்த உரம் எங்குப் போகிறது என்று ஓட்டுநர்களை மிரட்டிய போது, திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட வழுக்குப்பாறை பகுதியில் உள்ள ஒரு குடோனுக்குக் கொண்டு செல்வதாக ஒப்புக்கொண்டனர்.

விவசாயிகளும் பொதுமக்களும் நேரடியாக அந்த ரகசியக் குடோனுக்குச் சென்று அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அந்த குடோன், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், அந்த குடோனுக்குள் சட்டவிரோதமாகச் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட அரசு யூரியா உர மூட்டைகள் மலை போலப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு விவசாயிகள் கொதித்தெழுந்தனர். ​அங்கு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விவசாயத்திற்குப் பயன்படும் இந்த யூரியாவைத் தண்ணீரில் கரைத்து, ரசாயனங்கள் கலந்து 'லிக்யூட் யூரியா' மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் மூலப்பொருளாக மாற்றி, இங்கு இருந்து கேரளாவுக்குக் கடத்திப் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்று வரும் மோசடி அம்பலமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

​இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக் கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், அந்த குடோனை முற்றுகையிட்டுப் போர்க்குரல் எழுப்பினர். 'ஏழை விவசாயிகள் ஒரு மூட்டை உரத்திற்குப் பல கிலோ மீட்டர் அலைந்து திரியும் நிலையில், டன் கணக்கில் அரசு உரத்தை இப்படித் தனியார் ஆலைகளுக்குக் கடத்துவது எப்படி?' என்று கேள்வி எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை மற்றும் மதுக்கரை போலீஸார் இந்த விவகாரம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil