Dailyhunt

புதுச்சேரியிலும் புயல் போல் மாறிய விசில். 3ம் இடத்தை பிடித்தது

Vivegam News 1 week ago

புதுச்சேரி: புதுச்சேரியிலும் விசில் புயல் வீசியுள்ளது. 16.66 சதவீத வாக்குகளுடன் பிரதான கட்சிகளை பின்னுக்கு தள்ளி த.வெ.க.

3ம் இடம் பிடித்துள்ளது.

திமுக மற்றும் பாஜக உட்பட பெரிய கட்சிகளை ஓட்டு சதவீதத்தில் பின்னுக்கு தள்ளி 3ம் இடம் என்ற அந்தஸ்தை த.வெ.க. பிடித்துள்ளது. புதுவை சட்டசபை தேர்தல் முடிவுகள் பிரதான தேசிய, மாநில அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றியுள்ளது.

முதல் தேர்தலிலேயே 2 பிரதான தேசிய மற்றும் திராவிட கட்சிகளை முந்தி த.வெ.க. நிகழ்த்தியுள்ள சாதனை அதிர வைத்துள்ளது. தேர்தலில் வழக்கம் போல என்.ஆர்.காங்கிரஸ் தனது செல்வாக்கை தக்க வைத்துள்ளது.

16 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 219 ஓட்டுகளை பெற்று, 23.02 சதவீத ஓட்டுடன் என்ஆர்.காங்கிரஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. 21 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 492 ஓட்டுகளை பெற்று, 17.60 சதவீதத்துடன் 2ம் இடத்தை பிடித்துள்ளது.

யாரும் எதிர்பாராதவிதமாக, த.வெ.க. புதுவை அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. 30 தொகுதிகளில் களம் கண்ட த.வெ.க. ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 477 ஓட்டுகளை குவித்து 16.66 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இதன் மூலம் 2 எம்.எல்.ஏ.க்களையும் முதன் முறையாக சட்டசபைக்கு அனுப்புகிறது.

அரசியலில் ஊறிய திமுக மற்றும் பாஜக உட்பட பெரிய கட்சிகளை ஓட்டு சதவீதத்தில் பின்னுக்கு தள்ளி 3ம் இடம் என்ற அந்தஸ்தை த.வெ.க. பிடித்துள்ளது. 13 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 36 ஓட்டுகள் பெற்று 13.83 சதவீதத்துடன் 4ம் இடத்தையும், 10 தொகுதிகளில் களம் கண்ட பாஜக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 583 ஓட்டுகள் பெற்று 12.26 சதவீதத்துடன் 5ம் இடத்தை பிடித்துள்ளது.

த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்த நேயம் மக்கள் கழகம் உருளையன்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் த.வெ.க. கூட்டணி 3 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது. முதல் தேர்தலிலேயே இரட்டை இலக்க ஓட்டு சதவீதத்துடன் புதுவை அரசியலில் புயலாக த.வெ.க. நுழைந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News