Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

இலங்கை அணிக்கு கடைசி நாளில் நெருக்கடி! - வெற்றியை நெருங்கும் இந்திய அணி

Vivegam News 4 days ago

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

கொழும்புவில் நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தேவ்தத் படிக்கல் 117 ரன்கள் விளாசி சதமடித்தார். துருவ் ஜூரலும் சிறப்பாக விளையாடி 115 ரன்கள் எடுத்தார்.

ரிஷப் பண்ட் 63 ரன்களும், சுப்மன் கில் 50 ரன்களும் எடுத்தனர். ஜெய்ஸ்வால் 45 ரன்களும், ஜடேஜா 43 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா மற்றும் கேஷரா நுவாந்தா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சோனல் தினுஷா 103 ரன்கள் எடுத்து சதமடித்தார். பசிந்து சூர்யபந்தாரா 80 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதார் தலா 3 விக்கெட்டுகளையும், சரண்ஷ் ஜெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்மூலம் இந்திய அணி 213 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இலங்கை அணி பாலோ-ஆன் பெற்றது. 2-வது இன்னிங்சில் இலங்கை வீரர்கள் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறிய நிலையில், பசிந்து சூர்யபந்தாரா 92 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 52 ரன்களும் எடுத்து போராடினர். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர்.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணியை விட 16 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் சார்பில் மானவ் சுதார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடைசி நாளில் இலங்கையின் மீதமுள்ள 4 விக்கெட்டுகளை இந்திய அணி விரைவாக வீழ்த்தினால் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. இதனால் போட்டியின் முடிவை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News