கொழும்பு: ஜெனீவாவுக்கான இலங்கை தூதுவர்... ஜெனீவாவிற்கான புதிய இலங்கை தூதுவராக பிரபல ஊடகவியலாளர் சி.ஏ.சந்திரபிரேமா நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், பல தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் மற்றும் பிற இராஜதந்திரிகள் நாட்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
எனவே வெற்றிடமாக இருக்கும் ஜெனீவா, ரஷ்யா, ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பிரபல வர்ணனையாளரும் எழுத்தாளருமான சந்திரபிரேமா ஜெனீவாவிற்கும், பேராதனை பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை பேராசிரியர் எம்.டி.லமவன்ச ரஷ்யாவிற்கான புதிய தூதராகவும் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை ஜேர்மனிக்கான புதிய தூதராக மனோரி உனம்புவா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஜெனிவா மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் புதிய தூதுவர் நியமிக்கப்படவுள்ளமை முக்கிய அம்சமாகும்.

