புதுடில்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்... 'மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழத் தொடங்கியுள்ளது. வங்கிகளுக்குக் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் நான்கு சதவிகிதமாகத் தொடரும்' என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் அவர் பேசியதாவது:
"2020 - ம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் பலவீனமாகவே உள்ளன.
கொரோனா பாதிப்புக்குப் பிறகு, தங்கம் மீதான கடன் அதிகரித்துள்ளது. முன்பு 75 சதவிகிதமாக இருந்த தங்கம் மீதான கடன் வாங்கும் விகிதம் இப்போது 90 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
தொழில்துறை வளர்ச்சிக்குக் கடன் வழங்குவது அவசியம். அதனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், முதன்மைத் துறைகளுக்கும் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், தேசிய வீட்டுவசதி வங்கி மற்றும் நபார்டு வங்கிக்கு ரெப்போ விகிதத்தில் ரூ. 10,000 கோடி கூடுதல் கடன் வழங்கப்படும். மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழத்தொடங்கியுள்ளது" என்றார்.
இன்றைய சந்திப்பில் தனிநபர் கடன்களைப் பற்றி ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், வங்கிகள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்களை நிர்ப்பந்திக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி வழங்கிய சலுகை இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. கொரோனா பிரச்னையால் தொழில் நலிவடைந்துள்ளது.
அதனால், தொழிலாளர்களும், தொழில் அதிபர்களும் ரிசர்வ் வங்கியின் கடன் தவணை தொடர்பான அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் இதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை!

