சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் சீனாவில் வெளியானால் நிச்சயமாக ரூ.1,000 கோடி வசூல் செய்யும் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளவர் சூரி. 'வெண்ணிலா கபடிக்குழு' திரைப்படத்தின் மூலம் பிரபலமான அவர், தொடர்ந்து 'ஜில்லா', 'வேதாளம்', 'அண்ணாத்த', 'ரஜினிமுருகன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக புதிய அவதாரம் எடுத்த சூரி, அதன்பிறகு 'கருடன்', 'கொட்டுக்காளி', 'மாமன்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன.
மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை
தற்போது மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப் போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. 'மண்டாடி' திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இசை வெளியீட்டு விழா
இந்நிலையில், 'மண்டாடி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சூரி மற்றும் சுஹாஸ் இணைந்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், நல்ல நடிகனுக்கு அவரது ரசிகர்கள்தான் பலம் என்று குறிப்பிட்டதுடன், சூரியின் கடின உழைப்பையும் பாராட்டினார்.
மேலும், கடலுக்குள் நடிப்பது சாதாரண விஷயம் கிடையாது என்றும், சூரி ரிஸ்க் எடுப்பதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"இந்த படத்தை சீனாவில் வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால் நிச்சயமாக ரூ.1,000 கோடி வசூல் செய்யும்" என்று சத்யராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
