கொழும்பு: சீனா பயணிகளுக்கு விசா ரத்து... சீனாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வருகை விசா நடைமுறை இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று இந்த அறிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இன்றுமுதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குள் பயணிகள் தவிர்ந்த வேறு எவரும் அனுமதிக்கபட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளான பெண்ணொருவர் நேற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழு மற்றும் குடிவரவு மற்றும் குடிவரவுத் துறை கட்டுப்பாட்டு அதிகாரிளுடன் ஆலோசிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின்படி சீனர்கள் இலங்கை வருவதற்கான காரணங்கள், சீனாவில் அவர்களின் இருப்பிடங்கள் குறித்து கவனமான பரிசீலனைகளின் பின்னரே அவர்களுக்கு விசா வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

