கர்நாடகா: சிவராஜ்குமார் மற்றும் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படத்தை இயக்கியவர் அபிஷன் ஜீவிந்த். இதனைத் தொடர்ந்து 'வித் லவ்' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் பேமிலி' தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் இணைந்து தயாரித்த 'வித் லவ்' திரைப்படம் காதலை மையமாகக் கொண்டிருந்தது. ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், நடிகர் ரஜினிகாந்திடமிருந்தும் பாராட்டுகளை பெற்றது.
அபிஷனுக்கு அப்பாவாக சிவராஜ்குமார்
அறிமுக இயக்குநர் கெளதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தில் யோகலட்சுமி, கானா வினோத், நடிகை ஷிவானி நாகராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக, கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்துக்கு அப்பாவாக நடிக்கிறார். இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பின் அறிவிப்பு கிளிம்ஸ் வீடியோவும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு நிறைவு
டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த், ஷிவானி நாகராம், யோகலட்சுமி, கானா வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து பணியாற்றிய இந்த பயணம் மகிழ்ச்சி, சகோதரத்துவம், காதல், சிரிப்பு மற்றும் தொடர்ச்சியான உழைப்பால் நிறைந்திருந்ததாகவும், இந்த நினைவுகளை எப்போதும் கொண்டாடுவோம் என்றும் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே 'ஹார்ட் பீட்' தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற நடிகை யோகலட்சுமி, வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
