Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

வயலூர் முருகன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா: நேற்று கொடியேற்றம்

Vivegam News 3 days ago

திருச்சி: திருச்சி அருகே உள்ள வயலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அவ்வகையில் இந்த ஆண்டின் வைகாசி விசாக திருவிழா நேற்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக வெள்ளி கேடயத்தில் எழுந்தருளிய முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு முத்துக்குமார சுவாமி வெள்ளி விமானத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற உள்ளது.

விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 28-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 3 மணிக்கு மேல் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி திருத்தேரில் எழுந்தருள்கிறார். அதன்பின் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கிறார்கள்.

மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடராஜர் தரிசனமும் 12 மணிக்கு மேல் விசாக நட்சத்திரத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வருதல் மற்றும் முருகனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி வெள்ளிக் கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் காட்சியளிக்கிறார். அதன்பின் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

11- ம் நாள் (சனிக்கிழமை) மாலை 6:00 மணிக்கு சங்காபிஷேகம், விசாக பால்குடநிகழ்ச்சி, இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 12-ம் நாள் 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Vivegam News