பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான பிலாவல் பூட்டோ சர்தாரி ஐரோப்பிய அரச குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.
ஆஸ்திரியாவின் கடைசி பேரரசர் சார்லஸ் I-ன் கொள்ளுப்பேத்தியான குளோரியா வான் ஹாப்ஸ்பர்க் என்பவரை பிலாவல் திருமணம் செய்ய இருப்பதாக சில பதிவுகள் கூறுகின்றன.
இந்த வதந்திக்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது பிலாவலின் தந்தையும் பாகிஸ்தான் அதிபருமான ஆசிப் அலி சர்தாரியின் ஆஸ்திரியா பயணம். அவர் தனிப்பட்ட பயணமாக ஏழு நாட்கள் ஆஸ்திரியா சென்றுள்ள நிலையில், இதனை பிலாவலின் திருமண ஏற்பாடுகளுடன் சிலர் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பினர். திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் தேதி முடிவு செய்யப்படலாம் என்றும் பல்வேறு பதிவுகள் வெளியாகின.
ஆனால் இந்த தகவல்களுக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. பிலாவலின் திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் குறித்த செய்திகள் "தவறானவை, ஆதாரமற்றவை" என்று கட்சியின் செய்தித் தொடர்பாளரும் கராச்சி மேயருமான முர்தசா வஹாப் தெரிவித்துள்ளார்.
பிலாவல் திருமணம் செய்ய விருப்பம் இருப்பதை கடந்த காலங்களில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். 2022ஆம் ஆண்டு ஐநா பொதுச்சபை கூட்டத்தின்போது திருமணம் குறித்த கேள்விக்கு, தனக்கு திருமணம் செய்ய திட்டம் இருப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் எப்போது திருமணம் என்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, தற்போது பரவி வரும் அரச குடும்ப திருமண தகவலுக்கு எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை. எனவே பிலாவல்-குளோரியா திருமணம் குறித்த செய்திகள் உண்மையா என்பது உறுதியாக தெரியாத நிலையில், சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது.
Edited by Siva

